‘கும்கி 2’ படத்துக்கு சிக்கல்!
இயக்குனர் பிரபு சாலமன் தயாரித்து இயக்கியுள்ள கும்கி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி படம் 2012 ம் ஆண்டு வெளியானது. 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது கும்கி 2 படத்தை, பிரபு சாலமன் தயாரித்து இயக்கியுள்ள படம் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கும்கி 2 படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சினிமா பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கும்கி 2 படத்தை தயாரிக்க, 2018 ம் ஆண்டு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் கடன் பெற்ற பிரபு சாலமன், கும்கி 2 படம் வெளியீட்டுக்கு பணத்தை வட்டியுடன் சேர்த்து திருப்பி தந்து விடுவதாக ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், வட்டியுடன் சேர்த்து 2 கோடியே 50 லட்சம் ரூபாயை திருப்பித் தராமல், நவம்பர் 14 ம் தேதி படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.