"முதல்வரின் வெற்று பேச்சால் அதலபாதாளத்திற்கு சென்ற சட்டம்-ஒழுங்கு!" – கொந்தளிக்கும் பாஜக!
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;-
சிவகங்கை மாவட்டம் மேலமங்கலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த வடமாடு மஞ்சுவிரட்டு விழாவில், 15-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி 'சுள்ளான்' மதன் என்பவர் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையிலேயே ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் பழிவாங்கும் நோக்கில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கொடூரமான கொலை என கூறப்படுகிறது.
இரட்டை கொலை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலிருந்து அண்மையில்தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் மீது பழிவாங்கும் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்பதை உள்ளூர் காவல்துறையும் உளவுத்துறையும் முன்கூட்டியே கணிக்க தவறியது.
தவெக அரசின் மன்னிக்க முடியாத நிர்வாக தோல்வியாகும். மக்கள் வெள்ளமெனத் திரளும் ஒரு திருவிழாக் களத்தில், கூலிப்படையினர் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து மனிதவேட்டை நடத்தும் அளவுக்கு துணிச்சல் அடைந்திருப்பது, உளவுத்துறை முற்றிலுமாக முடங்கி கிடப்பதையே படம்பிடித்து காட்டுகிறது.
காவல்துறையைத் தன் வசம் வைத்துள்ள முதல்-அமைச்சர், தேர்தல் மேடைகளில் பேசிய கவர்ச்சிகரமான வெற்று பேச்சுகளோடு நின்றுவிட்டதால், தவெக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது
குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீதான பயமே அற்றுப்போய்விட்ட சூழலில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனது நிர்வாக மெத்தனத்தை கைவிட்டு, இத்தகைய கூலிப்படை கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு உடனடியாக ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.