கடைசி 4 நாட்கள்..! உடனே இந்த வேலையை முடிச்சிடுங்க..!
ரேஷன் கார்டில் பெயர் இருந்து கைவிரல் ரேகை இன்னும் பதிவு செய்யாதவர்களுக்கு, தங்களின் கை விரல் ரேகையை பதிவு செய்ய இன்னும் 4 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது. மார்ச் 25 ஆம் தேதி கடைசி நாளாகும்.
மார்ச் 25 ஆம் தேதிக்குள் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்கள் தங்களின் கைவிரல் ரேகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் பெயர் நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.
வழக்கமாக ரேஷன் கார்டில் பொருள் வாங்கும்போது கொடுக்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் பெயர் நீக்கப்பட்டவர்களுக்கு உரிய அளவுகள் வழங்கப்படாது. எனவே இப்படியான சிக்கல்களை எதிர்கொள்ளாமல் இருக்க கூடிய சீக்கிரம் உங்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ளுங்கள். வேலை காரணமாக வெளியூர்களுக்கு சென்றிருப்பவர்கள் ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டம் உள்ள கடைகளில் கூட தங்களின் அசல் ரேஷன் கார்டை எடுத்துச் சென்று தங்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ளவும். வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாது, வெளி மாநிலங்களில் வசிப்பவர்கள் கூட அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று தங்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ளலாம்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ; தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா (PHH-AAY) குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்கள், அக்குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது விரல்ரேகையை (Biometric) பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை விரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 25.03.2026-க்குள் தங்களது விரல்ரேகையை பதிவு செய்து கொள்ளுமாறு திருவள்ளூர் தெரிவித்துள்ளார். மற்ற மாவட்டத்தினரும் இதுவரை ரேஷன் கார்டு கைவிரல் ரேகை பதிவு செய்யவில்லை என்றால் குறிப்பிட்ட தேதிக்குள் சென்று கைவிரல் ரேகை பதிவு செய்து கொள்ளவும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், காலவகாசம் நீட்டிப்பு வழங்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வராத வரை மார்ச் 25 என்பதே இதற்கான காலவகாசம். இந்த தேதி வரை காத்திருக்காமல் முடிந்தளவுக்கு உங்களின் கைவிரல் ரேகை பதிவு செய்து கொள்ளுங்கள். ஒருவேளை உங்களால் கைவிரல் ரேகை பதிவு செய்ய முடியவில்லை என்றால், உங்களின் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படி நீக்கப்பட்டால் மீண்டும் நீங்கள் பெயர் சேர்க்க விண்ணப்பித்து காத்திருக்க வேண்டும்.
இன்னொரு அப்டேட்டும் இருக்கிறது. தேர்தல் முடியும் வரை ரேஷன் கார்டு தொடர்பான குறைத்தீர்ப்பு முகாம்களும் நடத்தப்படாது என மாவட்ட நிர்வாகங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ரேஷன் கார்டு பிரச்சனைகளை குறைத்தீர்ப்பு முகாம்கள் மூலம் தீர்வு காண பொதுமக்கள் ஜூன் மாதம் வரை காத்திருக்க வேண்டும்.