×

குலதெய்வ கோயில் திருவிழா - ஒயிலாட்டம் ஆடி அசத்திய.. சூரி-விமல்..!

 

மதுரை மாவட்டம் ராஜாக்கூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. நடிகர் சூரியின் சொந்த ஊரான ராஜாக்கூரில் ஆண்டுதோறும் நடைபெறும் காளியம்மன் கோயில் ஆடித் திருவிழாவில், அந்த கிராம மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான ராஜாக்கூர் காளியம்மன் கோயில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த சில நாட்களாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆடித் திருவிழாவை ஒட்டி அம்மனுக்கு காப்பு கட்டுதல், முளைப்பாரி எடுத்தல், கும்மிப் பாட்டு, ஒயிலாட்டம், அம்மன் திருவீதி உலா உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறுகின்றன.

இதனைத் தொடர்ந்து, ராஜாக்கூர் காளியம்மன் கோயில் ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நேற்று (ஜூலை 30) இரவு நடைபெற்றது. இதில், நடிகர்கள் சூரி மற்றும் விமல் கலந்து கொண்டு பக்தர்களுடன் இணைந்து காளியம்மன் கோயிலில் வழிபாட்டில் பங்கேற்றனர்.

இதன் பின்னர் நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியில் பாரம்பரிய கலைஞர்களுடன் இணைந்து நடிகர்கள் சூரி மற்றும் விமல் இருவரும் உற்சாகமாக நடனமாடினர். நடிகர்கள் இருவரும் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பலரும் இதனை பாராட்டி வருகின்றனர்.

அவர்களின் நடனத்தை பார்த்த அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும், ரசிகர்களும் அதனை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். திருவிழாவிற்கு வருகை தந்திருந்த நடிகர்கள் சூரி மற்றும் விமல் ஆகியோருடன் கிராம மக்கள் கலந்துரையாடி, அவர்களுடன் புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ராஜாக்கூர் காளியம்மன் கோயில் திருவிழாவிலும் நடிகர்கள் சூரி மற்றும் விமல் இருவரும் கலந்துகொண்டு ஒயிலாட்ட கலைஞர்களுடன் இணைந்து நடனமாடியது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/1JMTQP-NThw?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/1JMTQP-NThw/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">