ஜோதிடர் பேச்சைக் கேட்டு மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்க அரசு துடிக்கிறது - மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு..!!
இன்று மீனவர்கள் தினத்தை முன்னிட்டு திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மீனவச் சொந்தங்கள் அனைவருக்கும் கடலளவு அன்போடு உலக மீனவர்கள் தின வாழ்த்துகள்! தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நெய்தல் நில நாயகர்களான மீனவ மக்களுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு.
அத்தகைய மீனவ மக்களுக்காக நமது திராவிட மாடல் ஆட்சியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, புதிய மீன்பிடித் துறைமுகங்கள், தூண்டில் வளைவுகள், எரிபொருள் மானியம் என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
ஆனால், தற்போதைய த.வெ.க. அரசோ ஜோதிடரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பட்டினப்பாக்கத்தில்தான் தலைமைச் செயலகம் கட்டுவோம் என மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது. திரையில் மீனவராக நடித்து ஏமாற்றிய முதல்-அமைச்சருக்கு மீனவர்களின் உண்மையான போராட்டக் குணம் பற்றித் தெரியவில்லை.
மீனவர்களின் பாதுகாப்பு, பாரம்பரிய மீன்பிடி உரிமை, மீனவக் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காகத் திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்! அவர்களின் போராட்டத்தில் உடன் நிற்கும்! அலைகளோடு போராடி, தமது உயிரைப் பணயம் வைத்து உணவளிக்கும் மீனவ மக்களின் துணிவையும் உழைப்பையும் போற்றுவோம்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.