'அண்ணன் சீர்' திட்டத்தில் மாற்றம் செய்த தவெக அரசு..!
தமிழக அரசின் ‘அண்ணன் சீர்’ திட்டத்திற்கான தகுதி வரம்பில் மாற்றம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பத்துப் பெண்களுக்கு இச்சீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இத்திட்டத்திற்கான தகுதி வரம்பு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே எனப் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "தமிழர் மரபில் திருமணத்தின்போது அண்ணன் வழங்கும் 'சீர்' என்பது அன்பு, பாசம், பாதுகாப்பு மற்றும் பொறுப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
இதன் அடிப்படையில், புதிய வாழ்க்கையைத் தொடங்கும் மணப்பெண்களுக்கு அரசின் சார்பில் அன்புப் பரிசாக 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் வழங்கும் வகையில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.
'அண்ணன் சீர்' திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், நடப்பு நிதியாண்டில் முதற்கட்டமாக ரூ.812 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியுடைய மணப்பெண்களுக்கு 22 காரட் எடையில் 8 கிராம் தங்க நாணயமும் ஒரு பட்டுப் புடவையும் வழங்கப்படும்.
இத்திட்டத்துக்கான தகுதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவை ஆகியவை தமிழ்நாடு வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம்-1998, மற்றும் அதற்கான விதிகள்-2000 ஆகியவற்றின்படி திறந்த ஒப்பந்தப்புள்ளி மூலம் கொள்முதல் செய்யப்படும்.
தங்க நாணயத்தின் கொள்முதல் விலை, கொள்முதல் ஆணை வழங்கப்படும் நாளன்று காலை இந்திய புல்லியன் மற்றும் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் (IBJA) நிர்ணயிக்கும் விலையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும்.
இந்தத் திட்டம், அரசாணை வெளியிடப்பட்ட அக்டோபர் 5ஆம் தேதி முதல் நடைபெறும் திருமணங்களுக்கு பொருந்தும். இதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாகப் பெறப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மிக முக்கியமான மகிழ்ச்சியான தருணம். அந்தத் தருணத்தில், ஒரு அண்ணனாக அரசே உடனிருந்து மணப்பெண்ணுக்கு சீர்வரிசை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மகளிர் நலன் காக்கும் அரசின் மக்கள் நலப் பயணத்தில், “அண்ணன் சீர்” திட்டமும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும். முதலமைச்சர் விஜய் தலைமையில் மகளிர் நலனுக்காக தொடர்ந்து செயல்படுவோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குறுதியில் முரண்பாடு
தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில், ஆண்டு வருமானம் 5 லட்ச ரூபாய்க்கு குறைவாக உள்ளவர்களுக்கு 'அண்ணன் சீர்' திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஆண்டுக்கு 2.5 லட்ச ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் மட்டும் 'அண்ணன் சீர்' திட்டத்தில் பயன்பெற தகுதி வாய்ந்தவர்கள் என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.