×

சிறுமியை உயிரோடு கிணற்றில் வீசிய கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் வாக்குமூலம்..!

 

மதுரையைச் சேர்ந்த பாலகணேஷ் – கார்த்திகைசெல்வி தம்பதியின் மகள் சாய் தீப்தி, கோடை விடுமுறைக்காக ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகர் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். இரவு நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டதால், பாட்டியுடன் வீட்டின் திண்ணையில் தூங்கியதாக கூறப்படுகிறது.

ஜூன் 28 அதிகாலை, பாட்டியுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போனதால், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீவிரமாக தேடினர். தகவலறிந்த போலீசாரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அருகில் உள்ள வீட்டின் உறைகிணற்றில் சிறுமியின் சடலம் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமியின் சொந்த அத்தையான சபரியா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், தனது கணவரை காதல் திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்தினர் தனது குழந்தைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும், அதே நேரத்தில் கணவரின் அக்காள் மகளான சாய் தீப்தி மீது அனைவரும் அதிக பாசம் காட்டியதால் தனக்கு கடுமையான பொறாமை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆத்திரத்தில், அதிகாலையில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது சிறுமியை தூக்கிச் சென்று அருகில் இருந்த கிணற்றில் உயிருடன் வீசி கொன்றதாகவும் அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்ட சபரியாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவினர்களுக்கிடையேயான பொறாமை காரணமாக, சொந்த அத்தையே சிறுமியை கொடூரமாக கொலை செய்ததாக வெளியாகியுள்ள தகவல், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.