இன்று தொடங்குகிறது தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர்..! தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுமா? ஆளுநர் உரை முழுமையாக வாசிக்கப்படுமா?
தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.முதல் நாளில், தமிழக ஆளுநர் அரலேக்கர், சட்டசபையில் தமிழக அரசின் சார்பில் தயாரித்து வைக்கப்பட்டுள்ள உரையை வாசிப்பார்.
இதைத் தொடர்ந்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பார். பின்னர், சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று, எத்தனை நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும்.அதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். விவாதம் நிறைவடைந்த பிறகு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்குவார்.
சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சியினர் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பத் தயாராகி வருகின்றனர்.குறிப்பாக, தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டி, இந்த விவகாரத்தில் சட்டசபையில் எழுப்பத் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தயாராகி வருகின்றனர்.மேலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, குதிரை பேரம், மின்தடை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது ஒருபுறம் இருக்க, ஆளுநர் உரை நடைபெறவுள்ள நிலையில், சட்டமன்றத்தில் இன்று முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏற்கனவே, தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, சட்டசபையில் தேசிய கீதத்திற்கு முக்கியத்துவம் தரப்படவில்லை எனக் கூறியும், ஆளுநர் உரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இருப்பதாக தெரிவித்தும் ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்காமல் சட்டசபையில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர், தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுமையாக வாசிப்பாரா அல்லது ஏதேனும் காரணம் கூறி பாதியிலேயே வெளியேறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.