×

“மனைவியுடன் சேர்த்து வைக்கணும்! குவாட்டரும், பிரியாணியும் வாங்கி கொடுக்கணும்”- போதை ஆசாமியால் பரபரப்பு

 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே குடிபோதையில் புளிய மரத்தின் மீது ஏறி இறங்க மறுத்த ஆசாமியை 4 மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் கீழே இறக்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் இருந்து மத்தூர் செல்லும் சாலையில் பூசி நாயக்கனூர் எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் பஸ் நிறுத்தம் அருகில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அருகில் இருந்த  அடி உயரமான புளிய மரத்தின் மீது ஏரி கூச்சலிட்டார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து எதற்காக மரத்தில் ஏறி நிற்கிறாய் என கேட்டனர். அதற்கு அந்த இளைஞர்,  “எனது மனைவியை என்னுடன் சேர்த்து வையுங்கள், எனக்கு குவாட்டரும், பிரியாணியும் வாங்கி தாருங்கள் என்று கூறினார். இதையடுத்து அப்பகுதி மக்கள் பர்கூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் உயரமான அடி உயர ஏணி மற்றும் பெரிய அளவிலான வலை போன்றவற்றை எடுத்துக் கொண்டு அப்பகுதிக்கு வந்து அவனை இறங்குமாறு கேட்டனர். அதை மறுத்த அந்த இளைஞர் குரங்கு போல் கிளைக்கு கிளை தாண்டி பீதியை கிளப்பினார். தீயணைப்பு துறையினர் சுமார் 4 மணி நேரம் போராடி மரத்தின் மேல் ஏறி வாலிபரை கை, கால் கட்டி கீழே விரித்து வைத்திருந்த வலையில் இறக்கினர். கீழே இறங்கியவுடன் அந்த வாலிபரை பற்றி விசாரித்த போது, அவரது பெயர் பால்ராஜ் (25) என்றும், ஆந்திரா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அவர் ஐகுந்தம் அருகே உள்ள சென்றாயநாயக்கனூர் கிராமத்தில் தங்கியிருந்தது தெரியவந்தது. அவர் குடிபோதையில் இருந்ததால் மேற்கொண்டு விவரங்கள் சேகரிக்க முடியவில்லை என்றும், கணவன் -  மனைவி இடையே ஏற்பட்ட தகராறு, அதேபால் மன உளைச்சல் ஏற்பட்டு இவ்வாறு செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த இளைஞர் பர்கூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபரா? அல்லது போதையில் இவ்வாறு செய்தாரா என தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.