☰
×

"தப்பியோடிய அண்ணன்... பலியான தம்பி!" – வியாசர்பாடியில் கொடூர கும்பல் செய்த வெறிச்செயல்!

 

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி இரவு சூர்யா மற்றும் அவரது தந்தை உட்பட 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சிலம்பரசனைத் தேடி வந்துள்ளனர்.

அந்த கும்பல் சிலம்பரசனைக் கொலை செய்யும் நோக்கில் தாக்க முயன்றபோது, சுதாரித்துக்கொண்ட சிலம்பரசன் அங்கிருந்து தப்பியோடினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 5 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த சிலம்பரசனின் 18 வயது தம்பி தனுஷை சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த தனுஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வியாசர்பாடி போலீசார், தனுஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய சூர்யா மற்றும் அவரது தந்தை உள்ளிட்ட 5 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தீபாவளி பண்டிகை தினத்தன்று நடந்த இந்த கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.