×

"தூண்டி விடும் திமுக"... பயிர்க்கடன் போராட்டம் பின்னணியில் திமுக..! - அமைச்சர் பி.டி.ஆர். நிர்மல்குமார் குற்றச்சாட்டு!

 

தமிழக சட்டம் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"திமுக தூண்டுதலின் பேரில் ஒரு சில இடங்களில் பயிர் கடன் தொடர்பாக போராட்டம் நடைபெற்று வருவதாகவும், விவசாயிகளின் நலனுக்காக CM விஜய் நாள்தோறும் போராடி வருகிறார் என்று தெரிவித்தார்.. பயிர் கடன் தொடர்பாக அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறோம் என கூறினார்.

மேலும், அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்கள் மற்றும் உபகரணக் குறைபாடுகள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் கணக்கிடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டதாகவும், அரசியல் சூழலை கருத்தில் கொண்டு சிலரை சந்திப்பது சரியாக இருக்காது என்று அவர் கூறியதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் சந்திப்பு நடைபெறும் என்றும், முதலமைச்சர் விஜய் அடிக்கடி மக்களை சந்திப்பார் என்றும் கூறிய அமைச்சர் நிர்மல் குமார், முதலமைச்சர் எங்கும் அவமரியாதையாக பேசமாட்டார் என்றும் தெரிவித்தார்.

சட்டம்-ஒழுங்கு குறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், குற்றச் சம்பவங்கள் நடைபெற்றவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்றும், பாலியல் குற்றச் சம்பவங்களில் கடந்த ஆட்சிக் காலத்தில் நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். தற்போது காவல்துறை துரிதமாக செயல்படுவதாகக் கூறி பொதுமக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

சட்டத்திற்கு புறம்பான மதுபான பார்கள் தொடர்பாக புகார் வந்தவுடன் உடனடியாக மூடப்படுகின்றன என்றும், சட்டத்திற்கு புறம்பான அனைத்து செயல்பாடுகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். சட்ட விரோத குவாரிகள் எங்காவது செயல்படுகின்றனவா என்பதை சுட்டிக்காட்ட முடியுமா என்றும் அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பினார்.

மின்சாரத் துறை குறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், தற்போது மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றும், மின்வெட்டு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மின்னகம் அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதிமுக தொடர்பாக பேசிய அவர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலில் தனது கட்சிக்குள் நிலவும் சூழ்நிலையை கவனிக்க வேண்டும் என்றும், அதிமுகவை காலி செய்ததே எடப்பாடி பழனிசாமி தான் என்றும் குற்றம்சாட்டினார்.

எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலினுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்ததாகவும், தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள ஸ்டாலினுடன் எடப்பாடி பழனிசாமி கை கோர்த்ததாகவும் விமர்சித்தார்.அதிமுக நிர்வாகிகள் திமுகவுக்கு செல்ல விருப்பமில்லாமல் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி வருவதாகவும், திமுகவுக்கு எதிராக நிற்கக்கூடிய கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.