10ம் வகுப்பில் 495 மதிப்பெண்கள்! பள்ளியில் முதலிடம்... ஆனால் உயிருடன் இல்லாத மாணவன்
கும்மிடிப்பூண்டி அருகே தேர்வு முடிந்த நாளில் ஏரியில் குளிக்கச் சென்று உயிரிழந்த மாணவன் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த அரியத்துறை கிராமத்தை சேர்ந்த அபிஷேக் (15) கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த ஏப்ரல் 2ம் தேதி 10ஆம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவுற்ற நிலையில் நண்பர்களுடன் அருகாமையில் உள்ள பன்பாக்கம் பெரிய ஏரியில் குளிக்க சென்ற போது ஏரியில் மூழ்கி சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியானதில் உயிரிழந்த மாணவன் அபிஷேக் 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அறிவியலில் 100, தமிழ், ஆங்கிலம், கணிதம் தலா 99, சமூக அறிவியல் 98 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். ஏரியில் மூழ்கி உயிரிழந்த மாணவன் தேர்வில் முதலிடம் பிடித்து அசத்தியது அபிஷேக்கின் குடும்பத்தார் மட்டுமின்றி, சக நண்பர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் கலங்கடிக்க செய்துள்ளது.