உயிருக்கே ஆபத்தான எபோலோ... தொடக்கத்திலேயே கண்டுபிடிப்பது எப்படி?
ஆப்பிரிக்கா நாடுகளான உகாண்டா, காங்கோ, சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எபோலோ வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் விலங்குகள் இடமிருந்து மனிதர்களுக்கு தொற்றக்கூடியது. இந்த நோய் உடல் உறுப்புகளை தாக்கி அதிகப்படியான காய்ச்சல் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இதனை தொடக்கத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கும்பட்சத்தில் இந்த நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.
தற்போது எபோலோ வைரஸ் தொற்று ஆப்பிரிக்கா நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு பரவாமல் தடுப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
அந்த வகையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் எந்த அளவுக்கு வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்து மத்திய சுகாதாரத் துறை மற்றும் சென்னை விமான நிலைய சுகாதாரத்துறை அலுவலர்கள் விமான நிலைய வளாகத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த கூட்டத்தில் காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் நாடுகளில் இருந்து சென்னைக்கு விமான சேவைகள் இல்லாவிட்டாலும், இணைப்பு விமானங்களில் சென்னைக்கு வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நேரடியாகவோ அல்லது இணைப்பு விமானங்கள் மூலமாகவோ சென்னை வரும் பயணிகள், விமான நிலையத்தில் வழங்கப்படும் படிவத்தில் தங்களது அனைத்து சுயவிவரங்களையும் நிரப்பி விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், எபோலோ நோய் அறிகுறிகள், அதை தடுக்க வேண்டிய அவசியங்கள் குறித்து பயணிகளுக்கு விமானங்களில் அறிவுரைகள் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் யாருக்காவது காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, உடல் சோர்வு போன்றவை இருந்தால் உடனடியாக விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் எனவும், விமானங்களில் வரும் பயணிகளுக்கு உடல் வெப்பநிலையை சோதனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து உடல்நலக்குறைவுடன் வரும் சந்தேகத்துக்கு இடமான பயணிகளை உடனடியாக தனிமைப்படுத்தி, அவர்களுக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள தனி ஆம்புலன்ஸ்கள் மூலம் அவர்களை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று தனி வார்டுகளில் தீவிர சோதனை செய்ய வேண்டும் எனவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.