முதலமைச்சருக்கு இனி முழு ஓய்வுதான்! - மு.க.ஸ்டாலினின் கொடைக்கானல் பயணத்தை விமர்சித்த தவெக நிர்மல் குமார்..!
2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அரசியல் கட்சி தலைவர்கள் இப்போது சற்று நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளனர். தேர்தலை முன்னிட்டு, தீவிர பரப்புரை மற்றும் பொதுக்கூட்டங்களில் ஈடுபட்ட வந்தநிலையில் குறிப்பிட்ட சில தலைவர்கள் வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லவும் தொடங்கியுள்ளனர்.
அந்தவகையில், நேற்றைய தினம் (ஏப்ரல் 24) உதயநிதி ஸ்டாலின் துபாய் சென்றநிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் சென்றார். இந்த நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், முதலமைச்சரின் கொடைக்கானல் பயணம் குறித்து விமர்சனம் செய்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும் சுற்றுலா செல்வதுதான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடும்பத்தின் வழக்கமாக இருக்கிறது. கொடைக்கானலுக்கு அவர் ஓய்வெடுக்க சென்றுள்ளார். இனி அவருக்கு முழு ஓய்வுதான்" என விமர்சித்தார்.
முன்னதாக பேசிய அவர், "2026 சட்டமன்ற தேர்தல், வித்தியாசமான தேர்தலாக நடந்து முடிந்துள்ளது. பல்வேறு இடங்களில் தவெக நிர்வாகிகள் மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது திமுகவின் அதிகார மீறலை வெளிக்காட்டுகிறது. தோல்வி பயத்தால் திமுக இதுபோன்ற வன்முறையில் ஈடுபட்டுள்ளது.
முறையான பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்காமல், 20 லட்சம் பேரை வாக்களிக்க விடாமலும் திமுக தடுத்துள்ளது. போக்குவரத்து துறை அதிகாரிகளும் இந்த விஷயத்தில் அவர்களுக்கு துணையாக இருந்து உள்ளனர்.
விஜய், சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர் அல்ல. சட்டமன்ற தேர்தல் என்பதால் தமிழக கட்சிகள் தொடர்பாக மட்டுமே பேச வேண்டியிருந்தது. இந்தசூழலில், சிறு வாக்கு வங்கி கூட இல்லாத பாஜகவை எதிர்க்கவில்லை என கேட்பது நியாயமாக இல்லை.
திமுக மீதான நம்பிக்கையை காங்கிரஸ் இழந்துவிட்டது. தற்போது எங்கள் கட்சி சார்பாக அமைச்சரவை பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுவது பொய்யான தகவல். திமுகவே இந்த தகவலை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறது. தேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் வாக்கு சதவீதம் அதிகரித்து இருப்பதற்கு தவெகவின் அரசியல் வருகை தான் காரணம். உளவுத்துறை ஐஜி முன்பே மாற்றப்பட்டு இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் திமுக, பாஜக கூட்டாக செயல்பட்டுள்ளது" என்றார்.