குட் நியூஸ் சொன்ன முதல்வர்..! இனி ஏ.சி. பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம்..!
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் ‘பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை திட்டம்’ ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெயரில் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியில் இந்தத் திட்டத்திற்கு ‘மகளிர் விடியல் பயணம்’ என பெயரிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தவெக ஆட்சி அமைத்தால் அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தார்.
அதன்படி ஆட்சி அமைத்த பின் இந்தத் திட்டத்தை நாளை (அக். 2ஆம் தேதி) முதலமைச்சர் விஜய் தொடங்கிவைக்க இருக்கிறார். இந்தத் திட்டத்தின் மூலம், மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ் (LSS), டீலக்ஸ் பேருந்துகள், மாவட்டங்களுக்கு இடையேயான புறநகர் சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்.
இந்நிலையில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு, அம்மாநிலத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து சேவையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, விரைவில் ஆந்திரப் பிரதேசத்தில் குளிர் சாதன வசதி கொண்ட பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அறிவித்துள்ளார்.