☰
×

களத்திற்கு வராத முதலமைச்சர், அமைச்சர்கள்- சென்னையை காப்பாற்றிய கமிஷனர்!

 

சென்னையில் பெருமழை பெய்த நிலையில், களத்தில் இல்லாத முதலமைச்சர், அமைச்சர்கள் வரவில்லை.


வடகிழக்கு பருவமழை தொடங்கினாலே வழக்கமாக வருவாய் துறை அமைச்சர், நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், வருவாய் துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் என அனைவரும் சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பாதிப்புகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்வது வழக்கம். ஆனால் தவெக அரசுபொறுப்பேற்ற பிறகு அனைத்துமே அதிகாரிகள் கையில் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவே தெரிகிறது. அமைச்சர்கள் களத்தில் இல்லை, ஆனால் அதிகாரிகள் தான் அரசை காப்பாற்றி வருகின்றனர். நேற்று சென்னையில் மழை பெய்ய ஆரம்பித்த உடனே, சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் களத்தில் இறங்கி, தூங்காமல், ஓய்வெடுக்காமல் தொடர்ந்து பணியாற்றி வந்தார். அதை நாம் கண்கூடாக பார்க்க முடிந்தது. உண்மையிலேயே இவரை போன்ற ஐஏஎஸ் அதிகாரிகளால் தான் ஒவ்வொரு அரசும் தப்பித்து வருகிறது என்பது தான் நிதர்சனம்.

பாரிமுனையில் 36.3 செ.மீ, 6 இடங்களில் 20 செ.மீக்கு மேல் என வரலாறு காணாத பேய் மழை கொட்டியும், சென்னை மாநகரை முடங்க விடாமல் அவர் போராடிய விதம் பாராட்டுக்குரியது. அதிகாரப்பூர்வ அறிக்கைப்படி இரவு முழுவதும் 15,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், 650 மோட்டார் பம்புகள், NDRF 1 குழு, TNDRF 4 குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டன. இதன் விளைவாக 22 சுரங்கப்பாதைகளும் காலை 6 மணிக்குள் திறக்கப்பட்டு, 9 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு, உயிரிழப்பு இல்லாமல் சென்னை காக்கப்பட்டது.  சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில இடங்களில் வடிகால் அமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. அதனால் தான் அந்த இடங்களில் மட்டும் தண்ணீர் தேங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த இடங்களில் தண்ணீரை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே பொது மக்களின் வேண்டுகோளாக உள்ளது.