தலைவர் உத்தரவு... ரஜினி பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடை - ரஜினி நற்பணி மன்றம் அறிக்கை..!
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய அரசியல் முன்னெடுப்புகளை எடுக்கவுள்ள நிலையில், ரஜினி ரசிகர்கள் பலரும் அவருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மற்றும் மதுரை உள்ளிட்ட பல இடங்களில் ரஜினி நற்பணி மன்றத்தினர் அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.ரஜினிகாந்த் ஆசியுடனே அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவதாக செய்திகள் பரவின.
இந்த நிலையில் ரஜினி பெயர், படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய ரஜினி ரசிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையில்: நமது அன்பு தலைவர் திரு.ரஜினிகாந்த் அவர்களின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ எந்த ஒரு கட்சிக்கோ, அமைப்பிற்கோ பயன்படுத்தகூடாது என தலைவரின் உத்தரவுப்படி, ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. என கூறப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ரஜினிகாந்த் அவர்கள் நேரடி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்பதைத் தீர்க்கமாக அறிவித்து, தனது 'ரஜினி மக்கள் மன்றத்தை மீண்டும் பழையபடி 'ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக மாற்றினார். எனினும், தேர்தல் நேரங்களிலும் அரசியல் நிகழ்வுகளிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் தங்களின் போஸ்டர்கள், பேனர்கள் மற்றும் சமூக ஊடகப் பிரசாரங்களில் ரஜினிகாந்தின் முகத்தையும் பெயரையும் பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இதனைத் தடுக்கும் பொருட்டும், ரசிகர்களிடையே தேவையற்ற அரசியல் குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையிலும், "தலைவர் ரஜினிகாந்தின் நேரடி உத்தரவின் பேரில்" இந்த அதிரடித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரசிகர் மன்ற தலைமைத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.