×

அதிகார குவியல்களால் மத்திய அரசுக்கு ரத்த கொதிப்பு;  மாநில அரசுகளுக்கு ரத்த சோகை  - முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

 

அளவுக்கு மீறிய அதிகார குவியல்களால் மத்திய அரசுக்கு ரத்த கொதிப்பும், மாநில அரசுகளுக்கு ரத்த சோகையும் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய, மாநில உறவுகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.  இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர்,  “மாநில சுயாட்சி குறித்த முதல் தேசிய கருத்தரங்கை தமிழ்நாடு அரசு சார்பில் தொடங்கி வைப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் மண்ணுக்கு என்று பல சிறப்புகள் இருக்கிறது. சமூக நீதியை எடுத்து சொல்லுகிற மண் தமிழ்நாடு. தமிழ்நாட்டின் அரசியல் என்பது சமூக நீதியை பின்பற்றியே இருக்கிறது. 

இந்தி மொழியை திண்டிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து எழுப்பிய இந்தி ஆதிக்க வெறுப்புக்கு எதிரான குரல் இன்று இந்தியாவின் பல மாநிலங்களிலும் எதிரொலிக்கின்றன. கர்நாடக மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இருமொழி கொள்கையை ஆதரித்து மக்கள் குரல் எழுப்புகிறார்கள். சட்டக் குறுக்கீடுகல், நிர்வாக குறுக்கீடுகள் வழியாக பாஜக அல்லாத எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு தொடர்ந்து தொல்லை தரும் வகையில், பல தடைகளை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. நிதி ஆணையங்கள் சுதந்திரமாக செயல்படுவதையும், மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய உரிய நியாயமான நிதி பங்கீட்டையும் மறுக்கிறது.  

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான பயன்கள் அனைவருக்கும் சென்று சேர்ந்துள்ளது. திராவி மாடல் ஆட்சியின் நான்கரை ஆண்டுகளில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.  ஒன்றிய அரசு விதிக்கின்ற நேர்முக வரிகளிலும், ஜிஎஸ்டி வரிகளிலும் மத்திய அரசுக்கு அதிக வருமானத்தை ஈட்டித்தருகிற மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.  ஆனால் மத்திய அரசு உரிய நிதி பகிர்வை வழங்காமல் குறுகிய அரசியல் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. 

பல்வேறு நெருக்கடிகளை மீறி போராடி தமிழ்நாட்டை உயர்த்தி வருகிறோம், இந்தியாவில் அதிகார குவிப்பு நடைபெறுவதை தவிர்க்க வேண்டும். மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படக் கூடாது. அளவுக்கு மீறிய அதிகார குவியல்களால் மத்திய அரசுக்கு ரத்த கொதிப்பும், மாநில அரசுகளுக்கு ரத்த சோகையும் ஏற்பட்டுள்ளது. அனைத்து தடைகளையும் மீறி தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும்..” என்று அவர் தெரிவித்தார்.