×

மெத்தனால் கலந்த விஷசாராயத்தை குடித்ததே உயிரிழப்புக்கு காரணம்- ஐஜி விளக்கம்

 

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷசாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் உள்ள எக்கியார் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஐந்து பேர் மரணமடைந்துள்ளனர்.  பலர் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த பெருங்கரணை, இருளர் பகுதியை  சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கள்ளச்சந்தையில் வாங்கிய மதுவை அருந்தி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதனை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியில் அமாவாசை என்பவர் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த ஏராளமான மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கள்ளச் சந்தையில் மது தயாரிப்பதற்காக வைத்திருந்த ரசாயன பவுடரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

இந்நிலையில் இச்சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ள வடக்கு மண்டல ஐஜி கண்ணன், “விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷசாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவர்கள்தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷசாராயத்தை குடித்ததே உயிரிழப்புக்கு காரணம் என தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக செங்கல்பட்டில் ஒரு ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் 4 பேர் தலைமறைவாக உள்ளனர், அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் 2 ஆய்வாளர்கள், 2 உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையின் மது விலக்கு வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.