×

அண்ணனை கொலை செய்வதரை குத்திக்கொன்று பழித்தீர்த்த தம்பி

 

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் புழல் ஏரிக்கரையோரம் இன்று அதிகாலையில் இளைஞர் ஒருவரை மர்மகும்பல் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு ஆட்டோவில் தப்பிச் சென்றது. இதையடுத்து புழல் ஏரிக்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் செங்குன்றம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் ஏதும் கிடைக்காததால் சடலத்தை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. 

தொடர்ந்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் எரிக்கரையோரம் இளைஞரை கத்தியால் கும்பல் ஒன்று குத்தி கொலை செய்து விட்டு ஆட்டோவில் தப்பி செல்வது தெரிய வந்தது. 
இதனையடுத்து போலீசார் ஆட்டோவில் தப்பிய 3பேரை கைது செய்து செங்குன்றம் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னையை சேர்ந்த ஆனந்தராஜ், புகிலன், முகமது ரபிக் என தெரிய வந்தது. அண்ணன் கொலைக்கு பழிக்கு பழி தீர்க்கவே இந்த கொலை அரங்கேறியது அம்பலமானது. 

கொலை செய்யப்பட்ட நபர் செங்குன்றம் அடுத்த அலமாதி பகுதியை சேர்ந்த ஏழுமலை (31) பெயிண்டராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவரை ஏழுமலை கொலை செய்துள்ளார். இந்த கொலைக்கு பழிக்கு பழி தீர்ப்பதற்காக கார்த்திக்ராஜாவின் தம்பி ஆனந்தராஜ் தமது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஏழுமலையை கத்தியால் குத்தி கொலை செய்தது விசாரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து 3பேரையும் கைது செய்த செங்குன்றம் காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.