×

ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் தகனம் செய்யப்பட்டது!

 

பாளையங்கோட்டை கேடிசி நகரில்  ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் உடல் ஐந்து தினங்களுக்குப் பிறகு இன்று சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக கனிமொழி எம்பி சீமான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

பாளையங்கோட்டை கேடிசி நகரில் கடந்த 27ஆம் தேதி கவின் என்ற ஐடி ஊழியர் காதல் விவகாரத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து கொலையாளி சுஜித்தின் தாய் மற்றும் தந்தையான உதவி காவல் ஆய்வாளர்கள் இருவரையும் கைது செய்ய வலியுறுத்தி கடந்த ஐந்து தினங்களாக உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையில் சுஜித் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது தந்தை சரவணன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்  ஐந்தாவது நாளான இன்று கவின் பெற்றோர் உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து காலை 10.30 மணி அளவில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று அவர்கள் கவின் உடலை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து ஊர்வலமாக கவிஞனின் உடல் கொண்டுவரப்பட்டு சொந்த ஊரான ஏரல் அருகே உள்ள ஆறுமுக மங்கலத்தில் கவினின் இல்லத்தின் முன்பு வைக்கப்பட்டு வைக்கப்பட்டது. அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதே சமயத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் கீதா ஜீவன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஊர்வசி அமிர்தராஜ், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் உள்ளிட்டோர்  அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர அஞ்சலி வைத்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அதன் பிறகு மீண்டும் கவினின் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக தகனம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது அங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த தகன அரங்கில் அவரது உடல் வைக்கப்பட்டு எரியூட்டப்பட்டது. இந்த நிலையில் எஸ்டிஎஸ்சி ஆணையத்தின் தலைவர் தமிழ்வாணன் மற்றும் உறுப்பினர்கள் கவினின் இல்லத்தில் இன்று நேரில் விசாரணை மேற்கொள்ள வருகை தந்தனர். ஆணையத்தின் தலைவர் முன்னாள் நீதி அரசர் தமிழ்வாணன் மற்றும் துணைத் தலைவர் இமயம் அண்ணாமலை உறுப்பினர்கள் செல்வகுமார் ஆனந்தராஜ் இளஞ்செழியன் உட்பட ஐந்து பேர் விசாரணைக்காக வருகை தந்தனர். தொடர்ந்து எஸ்சிஎஸ்டி மாநில தலைவர் தமிழ்வாணன் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக  இழப்பீட்டு தொகை பன்னிரெண்டேகால் இலட்சத்தில் முதல் கட்டமாக ஆறு லட்ச ரூபாய்க்கான காசோலை தாய் தமிழ்ச்செல்வி இடம் வழங்கப்பட்டது.