×

வன்னியர் பெண்ணை காதல் திருமணம் செய்த தலித் இளைஞர் தண்டவாளத்தில் சடலமாக மீட்பு

 

வன்னியர் சமூக பெண்ணை, காதல் திருமணம் செய்த தலித் இளைஞர் ரயில்வே இருப்பு பாதையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தட்டாப்பட்டி கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் (29) மற்றும் தாரமங்கலத்தை சேர்ந்த சித்ரா(19) இருவரும் வெப்படையில் உள்ள தனியார் ஆலையில் பணியாற்றி வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட காதலால், கடந்த 11.11.2021. ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி 12ம் தேதி மதுரையில் திருமணம் செய்து கொண்டனர். பெண்ணை காணவில்லை என சித்ராவின் உறவினர்கள் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காதல் ஜோடி அடைக்கலம் தேடி சங்ககிரி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். 

தஞ்சமடைந்த இருவரையும் தாரமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போலீசார், மோகன்ராஜை மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. சித்ராவை காப்பகத்திற்கு அனுப்பி உள்ளனர்.  இந்நிலையில் மோகன்ராஜ் சடலம்  இன்று அதிகாலை சங்ககிரி மாவேலிபாளையம் ரயில்வே இருப்பு பாதையில் இருந்து மீட்கப்பட்டு பெருந்துறை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. மோகன்ராஜ் தற்கொலை செய்து கொள்வதாக எழுதிய கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் தனது உயிரிழப்பிற்கு சித்ராவின் உறவினர்கள் மூன்று பேர் காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் மூன்று பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்களும் ஆதித்தமிழர் பேரவையினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் மோஜன்ராஜ் இறப்புக்கு நீதிக்கேட்டு பெருந்துறை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மோகன்ராஜ்க்கு ஏற்கனவே திருமணமாகி மகாலட்சுமி என்ற மனைவியும் 6 வயது பெண்குழந்தையும் உள்ளது. இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். அதுதொடர்பான விவாகரத்து வழக்கும் நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.