×

தேர்தல் நெருக்கத்தில் அண்ணாமலை விலகிய பின்னணி

 

தேசிய கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை, தேர்தல் பணிகளில் இருந்து திடீரென விலகியிருப்பது, கட்சிக்குள் புதிய அரசியல் கேள்விகளை எழுப்பியுள்ளது. தந்தையின் உடல்நலன் காரணம் முன்வைக்கப்பட்டாலும், டெல்லி தலைமையுடனான கருத்து வேறுபாடுகளே இந்த முடிவுக்குப் பின்னணி என, கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே முன்னாள் தலைவர் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கலாம் என்ற ஊகங்கள் நிலவி வந்த நிலையில், தற்போதைய சூழலில் அந்தத் திட்டம் செயல்பாட்டில் இல்லை என்றும், அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. இருப்பினும், தேர்தல் நேரத்தில் அவர் முழுமையாக விலகியிருப்பது, தேசிய கட்சி தலைமையை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக பொறுப்பை ஏற்ற பின், கட்சியின் நிர்வாக நியமனங்கள் மற்றும் அரசியல் முடிவுகளில் முழுக் கட்டுப்பாட்டை வைத்திருந்த அண்ணாமலை, டெல்லி தலைமையின் ஆதரவுடன் செயல்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தைகளின் போது உருவான அழுத்தங்கள் காரணமாக, அவரை மாற்றும் முடிவை தேசிய தலைமை எடுத்ததாகவும், அதன்பின்னர் அவரது ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் வெளியான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிலும், அண்ணாமலையின் பெயர் இடம்பெறாதது கவனம் பெற்றுள்ளது. அதேபோல், என்டிஏ பொதுக்கூட்டங்களிலும் அவருக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இதன் பின்னணியில், கொங்கு மண்டலத்தை மையமாகக் கொண்டு புதிய அரசியல் முயற்சி குறித்த தகவல்களும் பரவின. இந்த நிலையில், தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க சில தொகுதிகளின் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தப் பொறுப்புகளிலிருந்தும் திடீரென விலகுவதாக அவர் தமிழக தலைமைக்கு தகவல் அளித்துள்ளார். இதனால், தேர்தல் தயாரிப்புகளில் பின்னடைவு ஏற்படும் என, கட்சிக்குள் சிலர் கவலை வெளியிட்டுள்ளனர். முன்னதாக, தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டபோது, டெல்லி தலைமையால் சில அரசியல் உறுதிகள் வழங்கப்பட்டதாகவும், அவை இதுவரை நடைமுறைக்கு வரவில்லை என்ற மனக்கசப்பு அவருக்கு இருப்பதாகவும், தமிழக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதுவே தற்போதைய இடைவெளிக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், தனிக்கட்சி தொடங்கும் விவகாரத்தில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும், தேர்தல் காலத்தில் பணிகளில் இருந்து விலகியிருப்பது அரசியல் ரீதியாக சரியான முடிவா என்ற கேள்வியும் எழுந்துள்ளதாகவும், கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், தேசிய தலைமை மற்றும் முன்னாள் தலைவர் இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.