×

சட்டசபை சினிமா போல மாறியுள்ளது; ரீல்ஸ் போட்டதே தவெக அரசின் 100 நாள் சாதனை..!: இபிஎஸ் குற்றச்சாட்டு!

 

சேலத்தில் நிருபர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியதாவது: 

சட்டசபையின் விதிமுறைகள் மாறிவிட்டன; நம் முன்னோர்கள் எல்லாம் அலங்கரித்த மன்றம், வரலாற்றுச் சிறப்புமிக்க நம் சட்டசபை இன்றைக்கு சினிமாவில் சட்டசபை இருப்பது போல் காட்சியளிக்கிறது. கோவை கல்லூரி மாணவர் கொலை தொடர்பாக சட்டசபையில் கேள்வி எழுப்புவோம். திங்கள் கிழமை விளக்கம் அளிப்பதாக அரசு கூறியுள்ளது. 

மாணவர்கள் போதைப்பொருளை பயன்படுத்தும் செயல் கண்டிக்கத்தக்கது.கடந்த ஐந்தாண்டுகளில் இருந்ததைவிட கூடுதலாக இப்போது போதைப் பொருள் புழக்கம் அதிகரித்திருக்கிறது. சட்டம் - ஒழுங்கு சீரழிவுக்குக் காரணமே இதுதான்; போதைப்பொருள் புழக்கத்தால் கல்லூரி மாணவர் கொலை நடந்ததா என்று விசாரிக்க வேண்டும். போதைப்பொருள் புழக்கத்தை தவெக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். ரீல்ஸ் போட்டதும், ரீல் விட்டதுமே தவெக அரசின் 100 நாள் சாதனை. அரிசி விலை கிலோவுக்கு ரூ.20 வரை உயர்ந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.காவிரி விவகாரத்தில் மக்கள் சொல்வதையாவது முதல்வர் கேட்க வேண்டும். 

காவிரி பிரச்னை பற்றி முதல்வருக்கு ஒன்றும் தெரியவில்லை; அதிமுக, திமுக தான் காவிரிக்காக குரல் கொடுத்தது. தவெக ஆட்சிக்கு வர துணை நின்ற கம்யூ கட்சிகள் கோரியும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டவில்லை. ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளை விரிவுப்படுத்தும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. வெற்றி, வெற்றி என ஒட்டுமொத்தமாக மக்களை ஏமாற்றியுள்ளார். ஒரு புதிய திட்டமும் இல்லை. 

இவ்வாறு இபிஎஸ் கூறினார்.