×

“உரிய நேரத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும்”- பிரேமலதா

 

உரிய நேரத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா இன்றைய தினம் வருகை தந்தார்.  அவர் கோவிலுக்கு முன்புள்ள கடலில் கால்நனைத்து, சூரிய பகவானை வழிபட்டார். தொடர்ந்து கோவிலுக்குள் சென்று முருகர், வள்ளி, தெய்வானை, சண்முகர், தட்சிணாமூர்த்தி, சத்ரு சம்ஹார மூர்த்தி, பெருமாள் சன்னதி உள்பட அனைத்து சன்னதியிலும் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கடற்கரையில் இருந்து கோவில் வரை நடந்து வந்த பிரேமலதாவை பார்த்த பக்தர்கள் உற்சாகத்துடன் கேப்டன் வாழ்க என்று கோஷமிட்டனர் அவர்களை பார்த்து புன்னகைத்து கோயிலுக்குள் சென்றார். 

தொடர்ந்து கோவிலுக்குள் இருந்து வெளியே வந்த பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருச்செந்தூர் முருகனை சந்தித்து ஆசி பெறுவதற்காக வருகை தந்துள்ளேன். நல்ல தரிசனம் கிடைத்தது. கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். தங்களது கட்சி நிர்வாகிகள் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கேட்கிறார்களோ அதன்படி நாங்கள் கூட்டணி வைப்போம். உரிய நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம். முருகன் அருளால் நிச்சயம் ஒரு மகத்தான கூட்டணி அமையும். அந்த கூட்டணி எல்லோருக்கும் நன்மை பயக்கும் கூட்டணியாக இருக்கும். 2026 சட்டமன்ற தேர்தல் நிச்சயம் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தலாக இருக்கும். நல்ல கூட்டணியை நிச்சயம் அமைப்போம், உரிய நேரத்தில் உறுதியாக அதை அறிவிப்போம்” என்று தெரிவித்தார்.