×

”நாங்கள் பார்வையிட்ட இடங்களில் தமிழக அரசின் நடவடிக்கை சிறப்பாக உள்ளது” ஒன்றிய குழு பாராட்டு

 

நிவாரணப் பணிகளை அரசு துரிதமாக மேற்கொண்டு இருந்தாலும் இது போன்ற பாதிப்புகள் மீண்டும் ஏற்படாத வகையில் நீண்ட காலத் திட்டங்களும் அவசியம் என்று ஒன்றிய ஆய்வுக் குழுவின் தலைவர் குணால் சத்யார்த்தி தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இரண்டாவது நாளாக ஒன்றிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்து வரக்கூடிய நிலையில், குணால் சத்யார்த்தி (தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) ஆலோசகர்),திமான் சிங், (ஊரக வளர்ச்சி அமைச்சகம்), ரங்நாத் ஆடம் ஆகியோர் கொண்ட குழு தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மங்கலம், சமத்துவ பெரியார் நகர், குட்வில் வரதராஜபுரம், முடிச்சூர் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் வெள்ள பாதிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தனர். அதோடு  மழை வெள்ளத்தால் சேதமடைந்த டீவி, பிரிட்ஜ் போன்ற உடைமைகளையும் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய குணால் சத்யார்த்தி, “தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு இருந்தாலும் இயற்கை பேரிடரால் இதுபோன்ற பெருவள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர் என அனைவரும் நிவாரண பணிகளை மேற்கொண்டனர். அதிலும் குறிப்பாக தமிழ்நாடு அரசு உணவு, பால் உட்பட அத்தியாவசிய பொருட்களையும் பொது மக்களுக்கு வழங்கியதோடு மருத்து முகாம் உட்பட அனைத்து நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டு இருக்கின்றனர். வளர்ந்து வரும் சென்னையில் நீர் நிலைகளும் அதிகமாக உள்ளது. இப்போது ஏற்பட்ட பாதிப்புகள் மீண்டும் ஏற்படாத வகையிலான நீண்ட கால திட்டங்களும் அவசியம். ஆய்வு அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும்” என்றார்.