“இப்ப கேக் வெட்டுறேன்.. அடுத்தமுறை கிடா வெட்டுறேன்”- உச்சக்கட்ட அதிருப்தியில் இளைஞர் செய்த செயல்
திருப்பூரில் உள்ள ஓலா நிறுவனத்தில் சர்வீசுக்கு விட்ட இரு சக்கர பேட்டரி வாகனம் கிடைக்காததால் ஓலா நிறுவனம் முன் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞரின் நூதன போராட்டம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
திருப்பூரில் பழுது பார்க்க விடப்பட்ட ஓலா இ பைக் 100 நாட்களை கடந்தும் திருப்பி வழங்கப்படாத நிலையில், அந்நிறுவனத்தை கண்டித்து பாதிக்கப்பட்ட இளைஞர் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் பழுதடைந்ததாக கூறி, சர்வீஸ்க்கு கொடுக்கப்பட்ட வாகனம் தற்போது வரை அவருக்கு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டுகிறார் பாதிக்கப்பட்ட இளைஞர் சந்தோஷ். வரை சேல்ஸ் நிறுவன ஊழியர்கள் போனில் தொடர்பு கொண்டு சமாதானம் செய்வதாகவும் அவர் கூறுகிறார்.
இதுதொடர்பாக சந்தோஷ் கூறுகையில், “கிட்டத்தட்ட வண்டி எடுத்து 2 வருடங்களாகிறது. சின்ன மோட்டர் பிரச்சனை காரணமாக மே மாதம் வண்டியை சர்வீஸ்க்கு கொடுத்தேன். அதற்கு பின் வண்டியை பற்றி எந்த அப்டேட்டும் இல்லை. நேரில் சென்றால் ரெஸ்பான்ஸ் இல்லை. திருப்பூரில் மட்டும் 150 வண்டிகள் பழுது என ஷோ ரூமில் நிற்கிறது. போக்குவரத்துத்துறை அமைச்சர் EV பைக்கிற்கு மாற சொல்றாங்க... ஆனா இந்த சர்வீச யார் பார்த்துக்குவா? நிறைய பேர் ஓலாவில் இதுபோன்ற பிரச்சனை என சொல்கிறாங்க...ஆனால் ஓலாவும் இன்னும் வண்டி விற்றுக்கொண்டுதான் இருக்காங்க. அரசாங்கம் இதுக்கு எதுவுமே நடவடிக்கை எடுக்கல. இவங்கள எதிர்த்து என்னால போராட முடியல. அதனால் ஓலா இ ஸ்கூட்டர் பழுது பார்க்க விட்டு 100 நாட்களை கடந்தும் திருப்பி தராததால் கடை வாசலில் கேக் வெட்டி செலபிரேஷன் செய்கிறேன். அடுத்த முறை கிடா வெட்டப் போறேன். என் வண்டி திருட்டு போயிருந்தா கூட விட்டு போயிட்டு இருப்பேன் இப்போ என்ன பண்றதுனே தெரியல. மக்களே ஓலா வண்டி எடுக்குறதுக்கு முன்னடி சர்வீஸ் இருக்காணு பார்த்துட்டு வாங்குக! நான் வண்டியை Tax கட்டிதான் எடுத்தேன்... அப்ப நம்ம நிலை என்ன? போக்குவரத்துத்துறை அமைச்சர் இதுக்கு பதில் சொல்லுவாங்களா? ஆர்.டி.ஓல போய் கேள்வி கேட்க முடியுமா?” என்றார்.