×

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி - முதலமைச்சர் விஜய்..!

 

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிகழ்வுகள் 4 நாட்கள் நடைபெற்ற நிலையில், இன்றோடு நிறைவடைகிறது. சட்டப்பேரவைத் தொடரின் விவாதத்தின் போது இதுவரை எந்த கேள்விகளுக்கும் முதலமைச்சர் பதிலளிக்கவில்லை. பதிலுரையின் போது முதலமைச்சர் அவற்றிற்கு பதிலளித்து வருகிறார்.

மக்கள் பணியை செய்வது தான் நமது கடமை. கருத்தால் வேறுபட்டாலும், மக்கள் நன்மை சார்ந்து ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என்று கூறி முதலமைச்சர் விஜய் தனது உரையைத் தொடங்கினார்.

சட்டசபையில் பேசிய முதலமைச்சர் விஜய், மக்களால் அங்கீகரிப்பட்டு சட்டமன்றம் வந்துள்ளோம். ராஜினாமா செய்தாலும் எங்களை தேர்ந்தெடுத்த திருச்சி கிழக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் பயணத்தை பற்றி பதிவு செய்ய விரும்புகிறேன். நாம் ஏதோ ஷூட்டிங்கில் இருந்து நேராக வந்து முதலமைச்சர் ஆனது போல் சித்தரிக்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் ஆசைப்படும் மொழியில் சொல்கிறோம். அது வெறும் ரீல் தான் ரியல் இல்லை என்றார்.

1990-களில் ரசிகர் மன்றமாக இருந்த போது மக்களுக்கு துணையாக நிற்க ஆரம்பித்தோம். அதன்பின்னர் நற்பணி மன்றமாகவும், விஜய் மக்கள் இயக்கமாகவும் மாறி மக்களோடு மக்களாக நின்று கொண்டிருந்தோம். 2008-ல் ஈழத் தமிழருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் செய்தோம். போர் முடிவுக்கு வரவேண்டும், ஈழத் தமிழருக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்க வேண்டும் என்று அன்றே கோரிக்கை வைத்தோம். கல்வி, கொரோனா, வெள்ளம் போன்ற காலங்களில் துணையாக இருந்தோம் என்றார்.

பெரியார் சொன்னதிலே ஏற்புடையதை மட்டும் எடுத்துக் கொண்டோம். அவர் கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடில்லை என்று அறிவித்தோம். நமக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்று அறிவித்தோம். யாருடைய நம்பிக்கைக்கும் நாம் எதிரானவர்கள் இல்லை என்று அறிவித்தோம். பெண் கல்வி, சமூக நீதி என இப்படி பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தோம். அண்ணல் அம்பேத்கரின் சமவாய்ப்பு, சம நீதி, சமத்துவத்தை பின்பற்றுவோம் என்று அறிவித்தோம். பெருந்தலைவர் காமராஜரின் மதச்சார்பின்மையை ஏற்றுக் கொண்டதுடன் அவருடைய நேர்மையான நிர்வாகத்தை ஒரு கொள்கையாக ஏற்றுக் கொண்டதாக நிரூபித்தோம் என்றார்.