×

தஞ்சையில் பரபரப்பு : நாதக கர்ப்பிணி வேட்பாளர் மீது தாக்குதல்..!

 

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அனீஸ் பாத்திமா (வயது 25) போட்டியிடுகிறார். நிறைமாத கர்ப்பிணியான இவர் நேற்று காலை முதல் தனது தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் சென்று வாக்குப்பதிவு நிலவரத்தை கண்காணித்தும், கேட்டறிந்தும் வந்தார்.

அந்த வகையில், நேற்று மாலையில் அம்மாப்பேட்டை அருகே உக்கடை என்ற கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்றதை பார்வையிடுவதற்காக நேரில் சென்றிந்தார். அப்போது வாக்குப்பதிவு மையத்தில் இருந்த சிலர் அனீஸ் பாத்திமாவை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அத்துடன் அவரை கீழே தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதில் மயக்கமடைந்த வேட்பாளர் அனீஸ் பாத்திமாவை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த தகவலை அறிந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நாதக வேட்பாளர் அனீஸ் பாத்திமாவின் கணவர் ஷேக் அம்சத் அலி கூறுகையில், "பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளருடன் தொகுதி முழுவதும் சென்று வாக்குப்பதிவு நிலவரத்தைப் பார்வையிட்டு வந்தோம். அப்படி உக்கடையில் உள்ள வாக்குப்பதிவை பார்வையிட சென்றபோது, துண்டு அணிந்து வரக்கூடாது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதனால் துண்டுகளைக் கழற்றிவிட்டு உள்ளே சென்றோம். அங்கு திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் சின்னமான ஏணி சின்னம் பொறித்த பேட்ஜ் அணிந்து கொண்டு வாக்குப்பதிவு மையத்தில் சிலர் அமர்ந்திருந்தனர்.

அப்போது அங்கிருந்த போலீசாரிடம் எங்களை மட்டும் துண்டு அணிந்து வரக்கூடாது என்று கூறினீர்கள். ஆனால் இங்கு ஏணி சின்னம் பேட்ஜ் அணிந்துள்ளனர் எனக் கேட்டபோது, அங்கிருந்தவர்கள் எங்களை தரக்குறைவாக பேசினர். அப்போது தலையிட்ட போலீசார், இது தொடர்பாக புகார் ஏதும் கொடுப்பதாக இருந்தால் புகார் மனு எழுதித்தாருங்கள் என்று கூறினர்.

அதே நேரத்தில் நாங்கள் புகார் மனு எழுத முயன்றபோது, அங்கிருந்த பலர் எனது மனைவியை கீழே தள்ளிவிட்டு செங்கற்களால் தாக்கினர். இதில் நிலைகுலைந்து போன எனது மனைவி மயக்கமடைந்ததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். தற்போது, தொடர் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.