தவெக அரசை கண்டித்து வரும் 16ம் தேதி சிவகாசியில் ஆர்ப்பாட்டம்- தங்கம் தென்னரசு அறிவிப்பு
தவெக அரசை கண்டித்து வரும் 16ம் தேதி சிவகாசி பேருந்துநிலையம் எதிரில் விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டத்தின் அச்சாணியாகவும், லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமாகவும் திகழும் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுவரும் பட்டாசு உற்பத்தி தொழிலை முடக்கும் வகையில், ஆய்வு என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் தவெக அரசின் தொழில் விரோத - தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும், பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க வலியுறுத்தியும், கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் வரும் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் சிவகாசி பேருந்து நிலையம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள்/நிர்வகாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.