×

“கூட்டணி ஆட்சி இல்லை என்பதில் பழனிசாமி உறுதியாக உள்ளார்”- தம்பிதுரை

 

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆரின் 109 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ராம் நகர் அண்ணா சிலை முன்பு, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஓசூர் தொகுதி பொறுப்பாளர் கலசப்பாக்கம் பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்று பேசினார்கள். 

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, “பாரதிய ஜனதா கட்சியுடன் இன்றைக்கு ஏன் கூட்டணி வைத்திருக்கிறோம் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் குறிக்கோள். அதற்கு ஒரு கூட்டணி தேவை என்பதை எடப்பாடி பழனிச்சாமி உணர்ந்துதான் பிஜேபியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் கூட்டணி, வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் இதுதான் கூட்டணி. அவர் அமைப்பது தான் கூட்டணி. அவர் யார் யாரை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அவர்களோடு தான் கூட்டணி. இதில் மாற்றம் கிடையாது. கூட்டணி என்பது தேர்தலுக்காக தான் மட்டுமே தவிர ஆட்சிக்காக கூட்டணி கிடையாது. அதில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருக்கின்றார். 

இதுவரை தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது நடைபெற்றது கிடையாது. 1924 ஆம் ஆண்டு ஜஸ்டிஸ் பார்ட்டி காலத்தில் இருந்து இதுவரைக்கும் கூட்டணி ஆட்சி என்பது இருந்தது கிடையாது. மேலும் 1952ல் இருந்தும் இதுவரையில் கூட்டணி ஆட்சி என்பது இருந்ததில்லை. அதேபோல 2026லும் கூட்டணி ஆட்சி என்பது கிடையாது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து ஆட்சி அமைக்கும். தேர்தலிலே கூட்டணி இருக்கும். ஆட்சியில் கூட்டணி இருக்காது. இதுதான் அதிமுகவின் கொள்கையும் ஆகும். என்றுமே தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை விரும்ப மாட்டார்கள். 2026இல் எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் என்று மக்கள் ஏற்கனவே முடிவெடுத்து விட்டார்கள். மீண்டும் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டும் தான். ஆட்சி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் ஆட்சி அமைப்பார். அதுதான் நம் தமிழகத்தினுடைய நிலையும். எனவே உங்களின் ஆதரவுடன் அதிமுக 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்றார்.