"பழனிசாமிக்கு செங்கோட்டையன் கெடு விதிக்க முடியாது"- தளவாய் சுந்தரம்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடு கொடுப்பதற்கெல்லாம் செங்கோட்டையனுக்கு உரிமை கிடையாது என முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கூறியுள்ளார்.
அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சி தலைமைக்கு எதிராக பேசியதாகவும், விதிகளை மீறி செயல்பட்டதாகவும் கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையனின் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவை சேர்ந்த 2000 நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். செங்கோட்டையனுக்கு ஆதரவாக அதிமுக தலைமைக்கழக உறுப்பினர் பதவி மற்றும் ஈரோடு மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவிகளை முன்னாள் எம்பி சத்யபாமா ராஜினாமா செய்தார். அடுத்த நிமிடமே அவரை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடு கொடுப்பதற்கெல்லாம் செங்கோட்டையனுக்கு உரிமை கிடையாது. ஈபிஎஸ்க்கு உதவுவதை விட்டுவிட்டு தொந்தரவு கொடுத்தால் எப்படி தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள்? பொது வெளியில் பதவி வேண்டாம் எனக் கூறும் ஓபிஎஸ், மோடிதான் தனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்ததாக கூறுகிறார். 10 நாள் காலக்கெடு என்று சொன்னால் பொதுச்செயலாளர் என்ன செய்ய முடியும்? செங்கோட்டையனுக்கு பின்னால் அதிமுக இரத்தம் என்று யார் கூறுகிறார்களோ அவர்கள் தான் இருக்கின்றனர்” என்றார்.