‘தலைவன் தலைவி’ ஓடிடியில் ரிலீஸ்..! எப்போ தெரியுமா ?
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், ஆர்.கே.சுரேஷ், செம்பியன் வினோத், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தலைவன் தலைவி’. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சுகுமார், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்திருந்தனர்.
வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழகத்தில் மொத்த வசூலில் ரூ.50 கோடியை கடந்து சாதனை புரிந்தது. தற்போது இப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் பரோட்டா கடை வைத்திருப்பவர் ஆகாசவீரன் (விஜய் சேதுபதி). பக்கத்து ஊரைச் சேர்ந்த அரசியுடன் (நித்யா மேனன்) ஆகாசவீரனுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. காதலிக்கத் தொடங்கும் இருவரும் மனதளவில் ஈர்க்கப்படுகின்றனர். ஆனால் ஹீரோவின் பின்னணியை தெரிந்துகொள்ளும் ஹீரோயின் குடும்பத்தினர் இந்த வரன் வேண்டாம் என்று சொல்கின்றனர். இன்னொரு பக்கம் நாயகியை திருமணம் செய்தால் ஹீரோவின் பெற்றோர் எதிர்காலத்தில் மருமகளால் ஒதுக்கப்படுவார்கள் என்று ஜோசியக்காரர் சொல்வதை கேட்டு இந்த திருமணத்தை நிறுத்த நினைக்கின்றது ஹீரோ குடும்பம்.
ஆனால், இரு வீட்டாரின் எதிர்ப்பையும் தாண்டி ஹீரோயினை தன் வீட்டுக்கு அழைத்து வந்து திருமணம் செய்துகொள்கிறார் ஹீரோ. நன்றாக சென்று கொண்டிருக்கும் குடும்ப வாழ்க்கையில் மாமியார் - மருமகள் பிரச்சினை, நாத்தனார் பிரச்சினை என ஆரம்பிக்கும் விரிசல் போகப் போக பெரிதாகி ஒரு கட்டத்தில் கணவன் - மனைவி இருவரும் பிரியும் நிலைக்கு வந்துவிடுகிறது. இருவரும் மீண்டும் சேர்ந்தார்களா, இல்லையா என்பதை நான்-லீனியர் பாணியில் அலசுகிறது ‘தலைவன் தலைவி’.