×

மாவட்ட தலைநகரங்களில் 3 நாட்கள் மறியல் போராட்டம் - டிக்டோஜாக் அறிவிப்பு..  

 

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ( டிக்டோஜாக்) சார்பில் மூன்று நாள் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “டிக்டோ ஜாக் மாநில உயர்மட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு ஊதியக் குழுக்களில் இழைக்கப்பட்ட அநீதி களையப்பட்டு ஊதிய முரண்பாடுகளை நீக்கி மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் 01.01.2006 முதல் மீண்டும் வழங்கிட வேண்டும். 

தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் 90 சதவிதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின், குறிப்பாகப் பெண்ணாசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பினைப் பறிக்கும் வகையிலும், ஊட்டுப்பதவிகளில் மாற்றம் செய்து ஒரு லட்சம் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வைப் பாதிக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 243ஜ முற்றிலும் ரத்து செய்திட வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜூலை 16 முதல் 18ம் தேதி வரை, திட்டமிட்டபடி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்துவது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.