×

'அமலாக்கத்துறை பா.ஜ.கவின் இளைஞர் அணி போல செயல்படுகிறது" - கே.பாலகிருஷ்ணன்

 

எதிர்க்கட்சிகளை பயமுறுத்த அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது பாஜக என்று சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைக்க பாஜக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறாது.  எதிர்க்கட்சிகள் ஆட்சி  நடக்கும் மாநிலத்தில் மட்டும்தான் ஊழலுக்கு எதிராக சோதனையா? பாஜகவின் இளைஞர் அணி போல் அமலாக்கத்துறை செயல்படுகிறது.

அமைச்சர் பொன்முடி வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதில் உள்நோக்கம் உள்ளது. எதிர்க்கட்சிகளை பயமுறுத்த அமலாக்க துறையை பாஜக பயன்படுத்துகிறது. எதிர்கட்சிகள் கூட்டத்தை இருட்டடிப்பு செய்யும் வகையில் சோதனை, இந்த சோதனைகள் பா.ஜ.க மீது மேலும் வெறுப்பை ஏற்படுத்தும்" என்றார். முன்னதாக 2006 முதல் 2011ஆம் ஆண்டு   கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி,  5 செம்மண் குவாரிகளை சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் , அரசுக்கு  50 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக கடந்த அதிமுக காலத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் அடிப்படையில் உயர்கல்வித்துறை அமைச்சரும்,  திமுக துணை பொதுச்செயலாளருமான பொன்முடியின் சென்னை மற்றும் விழுப்புரம் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.