×

தூத்துக்குடியில் பயங்கரம்! காட்டுப்பகுதியில் முகச்சிதைவுடன் கிடந்த +2 மாணவியின் சடலம்..!

 

தூத்துக்குடி அருகே விவசாயி தம்பதியின் 17 வயது மகள் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுதி வந்த நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 10) மாலை 6 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பின் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

மாணவியின் தந்தை பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நேற்று குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்று உள்ளார். அப்போது அங்கிருந்த போலீஸார், பள்ளி மாணவி என்பதால் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து அவர்நேற்று (மார்ச் 11) காலை விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இந்த நிலையில், இன்று மாலை வேடநத்தம் காட்டுப் பகுதியில் அந்த மாணவி முகம் மற்றும் உடலில் காயங்களுடன் சடலமாக கிடப்பது தெரிய வந்துள்ளது.

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து குளத்தூர் - குறுக்குச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் மற்றும் போலீஸார் நேரில் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் சம்பவ இடத்துக்கு வந்து மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அத்துடன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

இருப்பினும், கிராம மக்கள் சாலை மறியலை கைவிடவில்லை. மேலும், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவும் நேரில் வந்து மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பள்ளி மாணவி காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவி கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? எப்படி கொலை செய்யப்பட்டார்? உள்ளிட்ட விவரங்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும். இந்நிலையில், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.