திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!
திருப்பூர் மாவட்டம் கருப்பகவுண்டம் பாளையம் அருகே உள்ள பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.
திருப்பூர் வீரபாண்டி அருகே கல்லாங்காடு பகுதியில் ஜெகதீஷ் என்பவருக்கு சொந்தமான எஸ்.பி.பி டெக்ஸ்டைல்ஸ் என்ற பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் பனியன் ஆடைகளை உற்பத்தி செய்து பிலிப்கார்ட் அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் இணையதளம் மூலமாக விற்பனை செய்து வருகிறார். இதில் வழக்கம் போல 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் பணிய நிறுவனத்தின் உள்ளே திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக பணியில் இருந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முற்பட்ட நிலையில் தீ படு வேகமாக பரவி அடுக்கி வைக்கப்பட்டிருந்த பனியன் துணிகள் மற்றும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பனியன் ஆடைகள் உள்ளிட்டவற்றில் பரவி கொளுந்து விட்டு எரியத் துவங்கியது.
இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் அனைவரும் வெளியேறிய நிலையில் பனியன் நிறுவனம் முழுவதுமாக தீ பற்றி எரிய துவங்கியது. இந்த விபத்தில் உள்ளே இருந்த பனியன் துணிகள் இயந்திரங்கள் என பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறிய நிலையில் திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் 5 தண்ணீர் லாரி மற்றும் பொக்லின் இயந்திரங்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வீரபாண்டி போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.