×

சென்னையில் கல்லூரி மாணவர்கள் இடையே பயங்கர மோதல்- நாட்டு வெடிகுண்டு வீச்சு

 

சென்னை எம்ஜிஆர் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே நடந்த மோதல் காரணமாக வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்து வருபவர் அரசன். இவருக்கும்  எம்ஜிஆர் சட்டக் கல்லூரியில் படித்து வரும் நவீன் என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் அரசன் என்பவரை நவீன்குமார் அவரது நண்பர்களும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இது குறித்து அரசனின் நண்பர் மாயஜோதி என்பவர் நவீன் குமாரிடம் இது குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பிரச்சனை கடந்த சில நாட்களாக தொடர்ந்து வந்த நிலையில் நேற்று இரவு மாயஜோதி மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து நவீன் குமார் வீட்டிற்கு மது போதையில் சென்று தகராறில் ஈடுபட்டு உள்ளனர். தகராறு முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் மாறி மாறி கற்களால் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் நவீன் தரப்பைச் சேர்ந்த நபர்கள் திடீரென ஒழித்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வீசியதில் மாயஜோதி தரப்பை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. 

பின்னர் இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(26), மாயஜோதி(21), அஜித்குமார்(30), ஜஸ்டின்(24), ஆசிக் (19), கார்த்திக்(25) என ஐந்து பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள நவீன் குமார் உட்பட சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.