×

ஜெய்ப்பூரில்  பதற்றம்..!!கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் மீது சரமாரி தாக்குதல்..!!

 
நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கடும் விமர்சனத்தை முன்வைத்திருந்தார். அவரது கருத்து நாட்டில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, அமெரிக்காவில் படித்து வரும் டிஜிட்டல் கிரியேட்டர் அபிஜீத் தீப்கே, 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்ற பெயரில் ஒரு மீம் பக்கத்தை தொடங்கினார்.
இதற்கு கோடிக்கணக்கான இளைஞர்கள் பெரும் ஆதரவை வழங்கிய நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் ஒரு அரசியல் இயக்கத்தையே தொடங்கினார்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 6ஆம் தேதி டெல்லியில் மிகப்பெரிய போராட்டத்தை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தியது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ தேர்வு மதிப்பீடு குளறுபடி உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, பெங்களூர், புனே, லக்னோ ஆகிய நகரங்களிலும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இன்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் அக்கட்சி சார்பில் போராட்டம் நடந்தது.
போராட்டம் நிறைவடைந்த நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் திப்கேவை அவரது ஆதரவாளர்கள் தோளில் சுமந்தபடி கோஷமிட்டு சென்றனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த சிலர், அபிஜித் தீப்கேவை திடீரென சரமாரியாக கன்னத்தில் அறைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது ஆதரவாளர்கள், அவர்களை பிடித்து அடித்து உதைத்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார், அவர்களை மீட்டு அழைத்து சென்றனர். அப்போது அவர்களில் ஒருவர், "அபிஜீத் இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார். நீட் தேர்வு கசிவு விவகாரத்தை ஒரு காரணமாக வைத்து, அவர் இதை செய்து வருகிறார். நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் அல்ல. நான் ஒரு தேசியவாதி" எனக் கூறினார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே, எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில், "ஒருவரை தாக்குவது என்பது கோழைத்தனத்தின் வெளிப்பாடு. நாங்கள் அமைதியான வழியில் குரல் கொடுத்து வருகிறோம். காந்தியையும், அம்பேத்கரையும் பின்பற்றுபவன் நான். அமைதியாகவும், அன்பாகவும் எனது போராட்டத்தை தொடர்வேன். தர்மேந்திர பிரதான் பதவி விலகியே ஆக வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
அபிஜீத் திப்கே மீதான தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.