சென்னையில் பதற்றம் : இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது..!
சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 14-வது நாளை எட்டியுள்ளது. அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
அரசின் "நோ ஒர்க் - நோ பே" அதிரடி: ஆசிரியர்களுடன் நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தொடக்கக் கல்வித்துறை தற்போது கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அதன்படி, பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு "பணி செய்யாத நாட்களுக்குச் சம்பளம் வழங்கப்படமாட்டாது" (No Work - No Pay) என்று அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்கள் ஆவேசம்: அரசின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து போராட்டக் குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், "சுமார் 5,000 ஆசிரியர்கள் சென்னையில் திரள்வதை முடக்கவே இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. இதுபோன்ற மிரட்டல்களை எதிர்பார்த்தே நாங்கள் களத்தில் நிற்கிறோம். அசையாத அரசாங்கத்தை அசைத்துப் பார்ப்போம்; வெற்றி கிடைக்கும் வரை எங்களின் போராட்டம் ஓயாது," என்று உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் பரபரப்பு - கைது நடவடிக்கை: முன்னதாக அறிவித்தபடி, இன்று சென்னை எழும்பூரில் ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் திரண்டு போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தைக் கலைக்க முயன்ற போலீசார், கலைந்து செல்ல மறுத்த ஆசிரியர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். இதனால் எழும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.