சென்னையில் பரபரப்பு..! ஆளுநர் மாளிகை முன் அரசியல் கட்சிக் கொடிகளை எரிக்க முயன்ற காவலர்..!
சென்னை, ஓட்டேரி காவல் நிலையத்தில் ஏட்டாக பணி புரிபவர் கோதண்டபாணி. இவரது மகளுக்கு ஏற்பட்ட கால் வலிக்கு, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதில் ஏற்பட்ட பாதிப்பில் கால் பாதம் அகற்றப்பட்டது. தவறான சிகிச்சையால் கால் பாதம் அகற்றப்பட்டது எனக்கூறி, சில ஆண்டுகளாக கோதண்டபாணி போராட்டம் நடத்தி வருகிறார்.
சில நாட்களுக்குமுன், சீருடையில் மகளுடன் தலைமை செயலகம் சென்ற கோதண்டபாணி, தி.மு.க., கொடியை எரித்தார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை, தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., கொடிகளுடன், மகளுடன் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நுழைய முயன்றார். பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அவரை தடுத்து அனுப்பினர்.
உடனே, சாலையின் மைய பகுதியில் அந்த கொடிகளை கீழே போட்டு எரிக்க முயன்றார். போலீசார் கொடிகளை பறிமுதல் செய்து, இருவரையும் கிண்டி போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் சமாதானம் பேசிய போலீசார், இருவரையும் ஆட்டோவில் அனுப்பி வைத்தனர்.