×

எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் தற்காலிக மாற்றங்கள்: சிரமத்திற்கு தெற்கு ரயில்வே வருத்தம் – மாற்று ஏற்பாடுகள் தீவிரம்!

 

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், அனைத்துப் பயணிகளுக்கும், குறிப்பாக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிப் பயணிகள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்காகப் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் தடையற்ற ரயில் பயணத்தை உறுதி செய்து வருகிறது.

பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இரயில் நிலையங்களில் அணுகல் உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை சென்னை கோட்டம் படிப்படியாக வலுப்படுத்தி வருகிறது. தற்போது சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் இரயில் நிலையங்களில் பெரிய அளவிலான மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், பயணிகள் நடமாட்டத்திற்கான வழிகளில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகளுக்குச் சில சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு சென்னை கோட்டம் வருத்தம் தெரிவிப்பதோடு, மறுசீரமைப்புப் காலத்தில் பயணிகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் செல்ல மாற்று ஏற்பாடுகளையும் கூடுதல் உதவி வசதிகளையும் செய்துள்ளது.

எழும்பூர் இரயில் நிலையப் பயணிகளுக்கான அணுகு வசதி ஏற்பாடுகள்:

சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, நடைமேடை எண் 11A-வைத் தவிர, பூந்தமல்லி நெடுஞ்சாலைப் பக்கத்திலிருந்து நடைமேடைகளுக்குச் செல்வதற்கான சக்கர நாற்காலி (Wheelchair) சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்த விழிப்புணர்வுப் பேனர்கள் லிஃப்ட், சாய்வுதளம் (Ramp) மற்றும் மெட்ரோ இரயில் நிலைய நுழைவு வாயில் அருகே வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளி பயணிகள் மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறு வழிகாட்டப்படுகிறார்கள்.

இதற்கு மாற்றாக, காந்தி இர்வின் சாலைப் பக்கத்திலிருந்து அனைத்து நடைமேடைகளுக்கும் சக்கர நாற்காலி மூலம் செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு வழிகாட்ட முதன்மை நுழைவாயிலில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. சக்கர நாற்காலி மற்றும் பிரத்யேக உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு உதவ, நிலைய வளாகத்தில் பல்வேறு இடங்களில் 18 சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக, சக்கர நாற்காலிப் பயணிகளை இரயில் வரை அழைத்துச் சென்று, அவர்கள் பெட்டியில் ஏற உதவுவது உள்ளிட்ட பொதுவான உதவிகளுக்காக மாற்றுத்திறனாளிகளுக்குப் பிரத்யேக உதவி எண் வழங்கப்பட்டுள்ளது. பயணிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த, நிலையத்தின் தகவல் காட்சித் திரைகள் (Passenger Information Display Units) மூலம் இது குறித்த தகவல்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

புதிய நடைமேம்பாலம் (FOB) பயன்பாட்டிற்கு வரும் வரை இந்த வசதி தற்காலிகமாகச் செயல்பாட்டில் இருக்கும். சக்கர நாற்காலி உதவி தேவைப்படும் மூத்த குடிமக்களின் வசதிக்காக, சுமை தூக்குபவர்களின் (Porter) சேவை மற்றும் அவர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்கள் குறித்த தகவல்களும் நிலைய வளாகத்தின் பொருத்தமான இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உதவி தேவைப்படும் பயணிகள் நிலைய மேலாளர் / நிலைய அதிகாரியை அணுகி இந்த வசதியைப் பெறலாம்.

நடந்து வரும் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தின் காந்தி இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி சாலைப் பக்கங்களை இணைக்கும் பிரம்மாண்டமான 18 மீட்டர் அகல நடைமேம்பாலம் கட்டும் பணி முன்னுரிமை அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலத்தில் 6 நகரும் படிக்கட்டுகள் (Escalators) மற்றும் 5 மின்தூக்கிகள் (Lifts) அமைக்கப்பட்டு, அனைத்து நடைமேடைகளுக்கும் வழிவகை செய்யப்படும். இப்பணி நடப்பு ஆண்டின் இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகளின் போக்குவரத்தை பெருமளவில் எளிதாக்கும்.

தாம்பரம் இரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அணுகு வசதி ஏற்பாடுகள்:

தாம்பரம் இரயில் நிலையத்தில், நிலைய வளாகத்தில் பல்வேறு இடங்களில் 13 சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளன. சுமை தூக்குபவர்களின் சேவைகள், அதற்கான கட்டணங்கள் மற்றும் உதவி தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் ஆகியவை மூத்த குடிமக்களின் வசதிக்காக நிலையத்தில் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உதவி தேவைப்படும் பயணிகள் நிலைய மேலாளர் / நிலைய அதிகாரியை அணுகி இந்த வசதியைப் பெறலாம்.

மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு, சக்கர நாற்காலி வசதி மற்றும் பிரத்யேக தொடர்பு எண் குறித்த தகவல்கள் இரண்டு நுழைவாயில்களிலும், பிற முக்கிய இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சக்கர நாற்காலிப் பயணிகளை இரயில் பெட்டி வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று, அவர்கள் ரயிலில் ஏற உதவுவதும் இதில் அடங்கும். புதிய நடைமேம்பாலம் திறக்கப்படும் வரை இந்த உதவி தற்காலிகமாக வழங்கப்படும்.

மேலும், மறுசீரமைப்புப் காலத்தில் பயணிகள் போக்குவரத்தை மேலும் எளிதாக்கும் வகையில், நடைமேடை எண் 1A-விலிருந்து தற்காலிகமாக பேட்டரியால் இயங்கும் வாகனச் சேவையை (BOV) வழங்குவது குறித்து கோட்ட அதிகாரிகள் குழு ஆய்வு செய்துள்ளது.

தாம்பரம் இரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கிகளுடன், அனைத்து நடைமேடைகளையும் இணைக்கும் 8 மீட்டர் அகல நடைமேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பயன்பாட்டிற்கு வந்தவுடன் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பயணம் மிகவும் எளிதாகும்.

சக்கர நாற்காலி வசதிகள் (Wheel Chair):

சென்னை கோட்டத்தில் உள்ள 118 இரயில் நிலையங்களில் நடமாட உதவி தேவைப்படும் பயணிகளுக்காகச் சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல், சென்னை கடற்கரை, மாம்பலம், பரங்கிமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யப் பல சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரை - வேளச்சேரி, சென்னை பூங்கா - தாம்பரம், ராயபுரம் - அரக்கோணம், பேசின் பிரிட்ஜ் சந்திப்பு - கும்மிடிப்பூண்டி மற்றும் செங்கல்பட்டு - விழுப்புரம் ஆகிய வழித்தடங்களில் உள்ள முக்கிய நிலையங்களுக்கும் இந்த வசதி விரிவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறிய நிலையங்கள் வழியாகப் பயணம் செய்யும் பயணிகளுக்கும் இந்த உதவி கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

சக்கர நாற்காலி அல்லது பிற உதவிகள் தேவைப்படும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகள் பணி மேலாளர் அல்லது நிலைய அதிகாரியின் அலுவலகத்தை தொடர்புக் கொள்ளலாம். இத்தகைய உதவி தேவைப்படும் பயணிகளுக்கு உடனடி உதவி வழங்கிட நிலைய ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல்:

அனைவரையும் உள்ளடக்கிய, அணுகக்கூடிய மற்றும் பயணியர் மைய இரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காகச் சென்னை கோட்டம் மேற்கொண்டு வரும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகச் சக்கர நாற்காலி வசதி அமைகிறது.

பயணிகள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் சென்று வர உதவும் வகையில் தொடு உணர்வுத் தரைத்தளங்கள் (Tactile flooring), அணுகக்கூடிய வழிகாட்டிப் பலகைகள், மின்தூக்கிகள், சாய்வுதளங்கள் மற்றும் குறைந்த உயரப் பயணச்சீட்டு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பல நிலையங்களில் வழங்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் உள்ள பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் (Battery-operated vehicles), நிலைய வளாகத்திற்குள் சிரமமின்றிச் செல்வதற்காகத் தற்போது செங்கல்பட்டிலும் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது, சென்னை கோட்டத்தில் உள்ள முக்கிய NSG, SG-1, SG-2, SG-3 மற்றும் SG-4 வகையைச் சேர்ந்த நிலையங்களில் 154 மின்தூக்கிகள் மற்றும் 65 நகரும் படிக்கட்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த வசதிகள் குறிப்பாக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், மருத்துவத் தேவை உடையவர்கள் மற்றும் கனமான லக்கேஜ்களை எடுத்துச் செல்லும் பயணிகளுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

பேட்டரியால் இயங்கும் வாகனங்கள், மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் போன்ற வசதிகளைப் பிற நிலையங்களுக்கும் விரிவாக்கும் பணிகள், பயணிகளின் எண்ணிக்கை மற்றும் நிலையங்களின் வகையின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை ரயில்வே கோட்ட நிர்வாகம் பயணிக்கு வேண்டுகோள்

நகரும் படிக்கட்டுகளைப் (Escalators) பயன்படுத்தும்போது பயணிகள் உரிய எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்குமாறு சென்னை கோட்டம் கேட்டுக்கொள்கிறது. நகரும் படிக்கட்டுகளின் செயல்பாட்டைப் பற்றி அறியாத சில பயணிகள், எதிர்பாராதவிதமாக அவற்றை நிறுத்திவிடுவதால் தேவையின்றிச் சேவை தடைபடுவதோடு, மற்ற பயணிகளுக்கும் தற்காலிகச் சிரமம் ஏற்படுவது கவனத்திற்கு வந்துள்ளது.

இரயில்வே அதிகாரிகள் வந்து அமைப்பைச் சரிசெய்யும் வரை (Reset) நகரும் படிக்கட்டுகள் இயங்காமல் நிற்கக்கூடும். எனவே, பயணிகள் நகரும் படிக்கட்டுகளைக் கவனமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துமாறும், சேவைத் தடங்கலுக்கு வழிவகுக்கும் செயல்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பல்வேறு நிலையங்களில் மறுசீரமைப்பு மற்றும் அணுகல் தொடர்பான பணிகள் நடைபெற்று வரும் இந்தச் சூழலில், பயணிகள் தங்களது தொடர் ஆதரவையும், ஒத்துழைப்பையும், பொறுமையையும் வழங்குமாறு சென்னை கோட்டம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

கட்டுமானப் காலத்தில் ஏற்படுகின்ற சிரமங்களைக் குறைப்பதற்காகப் பயணிகளின் போக்குவரத்து ஏற்பாடுகளை சென்னை கோட்டம் தொடர்ந்து மறுஆய்வு செய்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. கூடுதல் உதவி தேவைப்படும் பயணிகள் இந்த இடைப்பட்ட காலத்தில் பயன்பெறும் வகையில் அனைத்துத் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. நடைமுறையில் உள்ள பணிகள் விரைவுபடுத்தப்பட்டு விரைவில் முடிக்கப்படும். இதன் மூலம் பயணிகள் மேம்படுத்தப்பட்ட வசதிகளையும் தடையற்ற பயணத்தையும் பெற முடியும்.

அனைவருக்கும் பாதுகாப்பான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் பயணியர் நலம் சார்ந்த இரயில்வே சூழலை உருவாக்குவதில் தெற்கு இரயில்வேயின் சென்னை கோட்டம் எப்போதும் உறுதியுடன் உள்ளது' என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது.