☰
×

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழா: விடிய விடிய கறி விருந்து..!

 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள முதல் நாடு கிராமத்தில் புகழ்பெற்ற எல்லைப்பிடாரி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து நடைபெற்றது. அம்மனுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 38 செம்மறி ஆடுகள் பலியிடப்பட்டு, விடிய விடிய சமைக்கப்பட்ட கறிக்குழம்பு மற்றும் சாதம் அம்மனுக்கு படையலிடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இந்த திருவிழாவில், 5,000-க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு கறி விருந்தை உண்டு மகிழ்ந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள முதல் நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பாரம்பரிய வினோத திருவிழா மற்றும் பிரம்மாண்ட கறிவிருந்து நடைபெறும். இந்த நிலையில், அம்மன் கோவில் திருவிழா கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை வரை வெகு சிறப்பாக நடைபெற்றது.

இத்திருவிழாவின் முக்கிய வழிபாடாக அம்மனுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 38 செம்மறி ஆட்டுக் கடாக்கள் பலியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பல நூறு கிலோ பச்சரிசி சாதம் வடிக்கப்பட்டு, பிரம்மாண்ட அண்டாக்களில் கமகமக்கும் ஆட்டிறைச்சி கறிக்குழம்பு விடிய விடியத் தயார் செய்யப்பட்டது. சமைக்கப்பட்ட பச்சரிசி சாதத்தை பெரிய அளவிலான உருண்டைகளாகப் பிடித்து, கறிக்குழம்புடன் சேர்த்து நள்ளிரவில் எல்லைப்பிடாரி அம்மனுக்கு படையலிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

பூஜைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அதிகாலை முதல் பிரம்மாண்ட கறிவிருந்து தொடங்கியது. இந்த கறிவிருந்தில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த 5,000-க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் அமரவைக்கப்பட்டு, ஆட்டிறைச்சி கறிக்குழம்புடன் கூடிய அசைவ உணவு பரிமாறப்பட்டது.

நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் இந்த வழிபாட்டு மரபின்படி, விழா தேதி குறிக்கப்பட்ட நாளில் இருந்தே பெண்கள் யாரும் இந்த கோவில் வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. இக்கோவிலில் சமைக்கப்படும் உணவையோ அல்லது திருநீறு போன்ற பிரசாதங்களையோ கூட பெண்கள் பார்க்கக் கூடாது என்பது இக்கிராம மக்களின் கடுமையான நம்பிக்கையாகும். இதன் காரணமாக, ஆண்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்த பின்பு மீதமிருக்கும் உணவுகள் மற்றும் எலும்புகள் அனைத்தும் அங்கேயே பெரிய குழி தோண்டி புதைக்கப்பட்டன. கிராமத்தின் ஒற்றுமைக்காகவும், குலதெய்வ வழிபாட்டிற்காகவும் நடத்தப்படும் இந்த 'ஆண்கள் மட்டும்' கறிவிருந்து திருவிழா இப்பகுதியில் ஆன்மீக நெகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.