☰
×

"ரவி தேஜா படத் தயாரிப்பாளர்களுக்கு திடீர் நோட்டீஸ்!" – தெலுங்கானா தொழிலாளர் நலத்துறை அதிரடி நடவடிக்கை!

 

ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் மற்றும் பேபி நட்சத்திரா நடிப்பில் வெளியான 'இருமுடி' படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தெலுங்கானா தொழிலாளர் நலத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி நட்சத்திராவை படப்பிடிப்பு மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தியது தொடர்பான விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பதை விசாரிக்க நவம்பர் 4ஆம் தேதி தயாரிப்பாளர்கள் நேரில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறார்களைத் திரைப்படங்களில் நடிக்க வைப்பதற்கும், விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்வதற்கும் மாவட்ட கலெக்டரிடம் முன்கூட்டியே அனுமதி பெறுவது கட்டாயம். இந்த நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விசாரிக்க, வரும் நவம்பர் 4ம் தேதி நேரில் ஆஜராகுமாறு படத்தின் தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறுமியைப் படப்பிடிப்பில் ஈடுபடுத்துவதற்கு முன்பாக உரிய அனுமதி பெறப்பட்டதா, அவருக்கான ஊதியத்தில் சட்ட விதிகளின்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டனவா, பணியாற்றிய நேரம் உள்ளிட்ட விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டனவா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

குறிப்பாக, சிறுமிக்கு வழங்கப்படும் மொத்த ஊதியத்தில் 20 சதவீதத் தொகையை அவரது பெயரில் நிலையான வைப்புத் தொகையாகச் செலுத்தியிருக்க வேண்டும். இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதற்கான ஆவணங்களையும் தயாரிப்பு நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், படப்பிடிப்பு மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளின்போது சிறுமி பணியாற்றிய நேரம் குறித்த விவரங்கள், அவரது பெற்றோரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் மற்றும் பள்ளிக் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களையும் தொழிலாளர் நலத்துறை கோரியுள்ளது.