இன்று மற்றும் நாளை ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு..! கொண்டு வர வேண்டியவை என்னென்ன?
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு இன்றும் மற்றும் நாளை (ஜூலை 4, 5) ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வு ஜூலை 4-ம் தேதி சுமார் 222 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது.
இந்த தேர்வை சுமார் 61,386 பேர் எழுதவுள்ளனர். அதே போல், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு வரும் ஜூலை 5- ஆம் தேதி 613 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வை 1,67,743 பேர் எழுதவுள்ளனர். ஒட்டு மொத்தமாக சுமார் 2,29,129 ஆசிரியர்கள் தேர்வெழுதுகின்றனர்.
தேர்வர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை https://www.trb.tn.gov.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வர்கள் காலை 8.30 மணி முதல் காலை 9.30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு ஹால் டிக்கெட்டுடன் வந்திருக்க வேண்டும். ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை மற்றும் 'இரண்டு பிளாக் பால் பாயிண்ட் பென்' ஆகியவை மட்டும் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 2025- ஆம் ஆண்டு உத்தரவிட்டது. மேலும், அந்த ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் இருந்து இரண்டு ஆண்டிற்குள் அனைத்து ஆசிரியர்களும் தகுதிப் பெற வேண்டும் எனவும், அப்படி தகுதிப் பெற விரும்பாதவர்கள் அவர்களுக்கான சலுகைகளுடன் ஓய்வுப் பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஓய்வு பெற ஐந்து ஆண்டுகள் வரை கால அவகாசம் கொண்டவர்களுக்கு மட்டும் இந்த உத்தரவில் இருந்து தளர்வு வழங்கப்பட்டது. பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு தேர்விற்கு பிப்ரவரி 13- ஆம் தேதி அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஆசிரியர் தகுதித் தேர்வு நேர்மையாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.