×

திருமணமான 3 மாதத்தில் சோகம்: ஆபாச வீடியோ காட்டி மிரட்டிய கணவர் - ஆசிரியை தற்கொலை!

 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை அடுத்த பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணமூர்த்தி. இவரது மகள் பிரியங்கா (30), தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவருக்கும் புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (36) என்பவருக்கும் கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மூன்றே மாதங்கள் ஆன நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரியங்கா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்தச் சூழலில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரியங்கா மனவேதனையுடன் விபரீத முடிவு எடுத்துக்கொண்டார். அவரை மீட்ட பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து கண்டமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பிரியங்காவின் உடலை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரியங்காவின் தாய் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் அதிர்ச்சியூட்டும் தகவல்களைத் தெரிவித்துள்ளார். திருமணத்தின்போது தருவதாகக் கூறிய 10 பவுன் நகையில் 5 பவுன் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், மீதமுள்ள 5 பவுன் நகையைக் கேட்டு மாமியார் கற்பகவள்ளியும் கணவர் கார்த்திகேயனும் பிரியங்காவைக் கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், பிரியங்காவை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்ட கார்த்திகேயன், நகை தராவிட்டால் அதை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதே தனது மகளின் தற்கொலைக்குக் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

திருமணமான மூன்றே மாதத்தில் இளம்பெண் உயிரிழந்திருப்பதால், இந்தச் சம்பவம் தொடர்பாக விழுப்புரம் ஆர்.டி.ஓ (RDO) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வரதட்சணை கொடுமை மற்றும் மிரட்டல் புகாரின் அடிப்படையில் கார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.