×

போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

 

சென்னையில் போராட்டம் ஈடுப்பட்டு வந்த பகுதி நேர ஆசிரியர் வார்னிஸ் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பகுதி நேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டி.பி.ஐ (DPI) பள்ளிக்கல்வி வளாகத்தில் ஜனவரி 8ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியான வாக்குறுதி எண் 181-ஐ நிறைவேற்ற வேண்டும் எனவும், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தற்போதைய தொகுப்பூதியமான 12,500-லிருந்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் நெற்றியில் 181 என எழுதியும், குடுகுடுப்பைக்காரர் போல வேடமிட்டும், வில்லுப்பாட்டு பாடியும் தங்களின் கோரிக்கைகளை நூதன முறையில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 6வது பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவகத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். அவர்களை அங்கிருந்து வானகரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்று அடைத்து வைத்திருந்தனர். அப்போது பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் தொடர்ந்து மிகவும் மன உளைச்சலுடன் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து எதிர்பாதர விதமாக காரணமாக அவர் மண்டபத்தில் இருந்த வார்னிஸை குடித்து தற்கொலை முயன்றர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக இடைநிலை ஆசிரியர்கள் உடனே அவரை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மண்டபத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் பிரச்சனைகளுக்கு அரசு ஆலோசனை செய்து முடிவு எட்டப்பட்டிருக்கும் நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் பிரச்சனைக்கும் அதேபோன்று முடிவு எட்டப்பட வேண்டும் என அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இடைநிலை ஆசிரியர் ஒருவர் தற்கொலை முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.