டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.33,023 வரை சம்பள உயர்வு: 8 மணி நேர வேலை, வார விடுமுறை உள்ளிட்ட மெகா அறிவிப்புகள்!
டாஸ்மாக் சில்லறை கடைகளில் 23 ஆண்டுகளாக 2000 முதல் 14,000 ரூபாய் வரை மட்டுமே டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்பட்டது. இந்த நிலையை மாற்றி தற்பொழுது பணியாளர்களின் நலனை கருத்தில்கொண்டு 1.9.2026 முதல் டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு 33,023 ரூபாயும், விற்பனையாளர்களுக்கு 30,284 ரூபாயும், உதவி விற்பனையாளர்களுக்கு 28,680 ரூபாயும் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ. 486.90 கோடி அரசுக்கு செலவு ஏற்படும்.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூபாய் 20,000 வழங்கப்படும்.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஆண்டுதோரும் 3 சீருடைகள் துணி மற்றும் தையல் செலவிற்காக 6000 ரூபாய் வழங்கப்படும்.
டாஸ்மாக் சில்லறை கடைகளில் தூய்மைப்பணி மற்றும் அடிப்படை வசதிகளை உறுதிசெய்யவும், சில்லறை செலவுகளை மேற்கொள்ளவும் மாதம்தோறும் மாநகர கடைகளுக்கு ரூபாய் 5000, நகராட்சி பேரூராட்சி கடைகளுக்கு ரூபாய் 4000, கிராமப்புற கறைகளுக்கு ரூபாய் 3000 வழங்கப்படும்.
டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, சுழற்சி முறையில் எட்டு மணி நேர பணி ஒதுக்கீடு, வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை, மாதத்திற்கு இரண்டு நாள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்கப்படும்.
டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களில் தகுதியுடைய 250 பணியாளர்களை சிறப்பு தேர்வு மூலம் இளநிலை உதவியாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பணியாளர்கள் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால், அரசு மிகக் கடுமையான நடவடிக்கையை எடுக்கும். கடந்த 2019 முதல் டாஸ்மாக் கடைகளில் ஒரு ரூபாயிலிருந்து ஒன்பது ரூபாய் வரை கூடுதல் விலையில் மதுபானங்களை விற்ற பணியாளர்களுக்கு வெறும் அபராதங்கள் மட்டுமே விதிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய ஆட்சியில் ஒரு ரூபாய் கூடுதலாக கட்டணம் வசூலித்தாலும் கூட, ஒரு மாதம் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, அடுத்த மூன்று மாதங்களில் அதே தவறு நடந்தால் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படும் என்ற அறிவிப்புகளை அமைச்சர் விக்னேஷ் அறிவித்தார்.