தமிழகத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!
வருகின்ற மே 01ந் தேதி மற்றும் மே 04ந் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடம் முழுவதும் ஓய்வில்லாமல் படுஜோராக ஓடி கொண்டிருக்கும் மதுபான விற்பனை வருடத்தில் 8 நாட்களுக்கு மட்டுமே விடுமுறை வழங்கப்படுகிறது.
- குடியரசு தினம்
- காந்தி ஜெயந்தி
- திருவள்ளுவர் தினம்
- சுதந்திர தினம்
- வள்ளலார் நினைவு நாள்
- மஹாவீர் ஜெயந்தி
- உழைப்பாளர் தினம்
- மிலாடி நபி
மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நாட்கள், கோவில் பண்டிகைகள், உள்ளூர் திருவிழா காலங்களில் அவ்வப்போது உள்ளூர் விடுமுறை விடுவது வழக்கம்.
இந்நிலையில், மே 01 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை ஆட்சித்தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மே 01, 2026 வெள்ளிக்கிழமை அன்று மே தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகள் மற்றும் அதைச் சார்ந்த பார்கள் மூடப்பட வேண்டும்.
மேலும், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A)/FL3(AA) முதல் FL11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையகங்கள் மற்றும் மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மீறி மதுபானம் விற்பனை செய்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ந் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 04ந் தேதி நடைபெற உள்ளது. மேலும், அன்றைய தினமே தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன. இதற்காக தமிழகம் முழுக்க 64 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கல் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும், காலை 8 மணிக்கு தொடங்கப்படும் வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகளும், 8.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள வாக்குகளும் எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் 4 முனைப் போட்டியை கருத்தில் கொண்டு ஒட்டுமொத்த தமிழகமும் அந்த நாளை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், மே 04 ஆம் தேதியும் மதுபான கடைகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.