இன்று மற்றும் நாளை டாஸ்மாக் கடைகள், தனியார் பார்கள் மூடல்!
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது.அக்டோபர் 6 (செவ்வாய்க்கிழமை) மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அக். 9 (வெள்ளிக்கிழமை) எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அக்டோபர் 5, 6 ஆகிய இரு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 6 ஆம் தேதி இந்த 2 தொகுதிகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து,செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
மதுராந்தகம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல், வரும் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள், அவற்றை சார்ந்த மதுக்கூடங்கள் மற்றும் மதுபான உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும், வரும் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரையும், ஓட்டு எண்ணிக்கை நாளான 9 ஆம் தேதியும் மூட வேண்டும். இந்த உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.